Sunday, 22 July 2012

முன்னாள் சிநேகிதிகள்


முன்னாள் சிநேகிதிகள்


போன வருடம்
பூங்கொத்துடன் வாழ்த்துச் சொன்ன
தோழி ஒருத்திக்கு
இந்த பிறந்த நாளில்
இருக்கேனா... செத்தேனா?
எனத் தெரியவில்லை.
அடுத்த கவிதைத் தொகுப்பின்
முதல் பிரதி
தனக்கே வேண்டுமெனச் சொன்ன
முப்பது தோழிகளின் புதிய எண்களும்
என்னிடம் இல்லை.
மூன்று வேளைகளும்
சாப்பிட்டாயா? என
குறுந்தகவலில் குடைச்சல் தந்த
தோழியின் அலைபேசிக்கு
அழைக்கிறபோதெல்லாம்
அணைத்துவைக்கப்பட்டிருப்பதாகச்
சொல்லப்படுகிறது.
என் மகளைத் தன் மகனுக்குக்
கேட்பேன் எனச் சொன்ன
தோழி ஒருத்தி
அவள் திருமணத்துக்கே
என்னை அழைக்கவில்லை.
திருமணத்துக்குப் பிறகு
தற்செயலாகச் சந்தித்த
தருணமொன்றில் தோழி ஒருத்தியிடம்
கோபித்துக்கொண்டேன்
அவளோ
'அவர் சரி, அத்தை - மாமாவிடம்
சிநேகிதன் ஒருவன் இருந்தானென
எப்படிச் சொல்வது?' என்றாள்.
இருந்தானில் இறந்துபோயிருந்தது
எங்கள் நட்பு!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.