இனப்பெருக்கம் எவ்வாறு நடைபெறுகிறது?
இனப்பெருக்க உறுப்புகளின் இயக்கம்:
இனப்பெருக்கத்தில் முக்கியப் பங்காற்றுவது கருப்பை, சினைப்பை, கருக்குழாய் போன்றவை. கருப்பை நீளம் 7.8 செ.மீ, அகலம் 5.6 செ.மீ, பருமன் 3.4 செ.மீ! இது தசை நார்களாலானது. நடுவில் மையோமெட்ரியம் என்ற வரிவரியான தசைப் பகுதி உள்ளது. கருவை தன்னோடு இணைத்து வளர்ப்பதற்கும், மாதப் போக்கு ஏற்படுவதற்கும் இந்த தசைப் பகுதிகளே காரணம். கரு பதியமாகி வளரும்போது கருப்பை பெரிதாகும். பிரசவத்தின்போது கருப்பை தசைகள் சுருங்கிக் கொடுத்து, வலியை உருவாக்கி, குழந்தையை வெளியேற்றும்.
கருப்பையின் இரு பக்கங்களிலும் இரண்டு கருக்குழாய்கள் உள்ளன. சுமார் பத்து செ.மீ. நீளமிருக்கும். இது மூன்று பகுதிகளைக் கொண்டது. இறுதிப் பகுதி சினைப்பையை நோக்கி வாய் போல் திறந்து, வளைந்து காணப்படும். இந்த வழியாகத்தான் கரு முட்டை கருப்பையை நோக்கி நகரும்.
விந்தணுவும், முட்டையும் கருக்குழாயில் கருத்தரித்து ஜைகோட் என்னும் சினை முட்டையாகிறது. அதன் பிறகுதான் கருப்பையை நோக்கி நகர்ந்து பதியமாகும். முடியைவிட மெலிதான கருக்குழாயில் அடைப்பு, பாதிப்பு ஏதாவது ஏற்படும்போது கருத்தரித்தல் நிகழாமல் போய்விடும்.
கருப்பையின் பின்பகுதியில், கருக்குழாயின் வெளிப்புற நுனிப்பகுதியில் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு சினைப்பைகள் இருக்கும். இவை ஒவ்வொன்றும் 3.5 செ.மீ. நீளம், 2 செ.மீ. அகலம், ஒரு செ.மீ. தடிமன் கொண்டது. சுமார் ஆறு கிராம் எடை கொண்டது.
பெண் குழந்தை தாய் வயிற்றில் கருவாக இருக்கும்போதே அதன் சினைப்பையின் மெடுல்லா என்ற உள்பகுதியில் லட்சக்கணக்கான சினை முட்டைகள் வளர்ச்சியடையாத நிலையில் இருக்கும். அவள் வயதுக்கு வந்த பின்பு முதிர்ந்து மாதந்தோறும் வெளியேறும். அதில் ஆணின் உயிரணு சேருவதே கருத்தரிப்பின் தொடக்கம்.
தற்போது குழந்தையில்லா தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதைத் தவிர்க்க திருமணத்திற்கு முன்பே அவர்கள் இனப்பெருக்க உறுப்புகள், அதன் இயக்கங்கள், பழக்க வழக்கங்களால் அவைகளில் ஏற்படும் கோளாறுகள் போன்றவைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும். வாழ்க்கையை சீரமைத்துக்கொண்டு, அதற்கு தக்கபடி வாழ்ந்தால் தாம்பத்ய சுகத்தை முழுமையாக அனுபவித்து, தாய்மையடைவதில் சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.