புளூடூத்
புளூடூத் (Bluetooth) அல்லது திறக்கற்றை என்பது குறைந்த தொலைவிலுள்ள நிலையான அல்லது மொபைல் சாதனங்களிடையே தரவைப் பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு திறந்த தரநிலை கம்பியில்லா நெறிமுறை ஆகும். இவ்வாறு இது தனிப்பரப்பு வலையமைப்புகளை (PANகள்) உருவாக்குகிறது. இது RS232 தரவு வடத்திற்கான கம்பியில்லா மாற்றாகவே கருதப்பட்டது. இது ஒத்திசைவுச் சிக்கலைகளை வென்று பல சாதனங்களை இணைக்க வல்லது.
பெயரும் சின்னமும்
புளூடூத் என்ற சொல்லானது பழைய செருமானிய மொழியிலான "ப்ளாடோன்" (Blátönn) அல்லது தானிய மொழியிலான "ப்ளாட்டேண்ட்" (Blåtand) ஆகிய சொற்களின் ஆங்கில வடிவமாகும். இது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த டென்மார்க்கின் முதலாம் ஹரால்ட் மன்னன் சிங்க் ஹெசால்ட் ப்ளாடண்ட் என்பவனின் சிறப்புப் பெயராகும். இந்த அரசனுக்கு புளூபெரீசு பழங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதைச் சாப்பிட்டு அவனது பற்கள் எல்லாம் நீலக்கறை படிந்திருந்தது. இதனால் அம்மன்னனை "புளு டூத்" என்று அழைக்கத் தொடங்கினர்.[1] அம்மன்னர் வேறுபட்ட டானிஷ் பழங்குடியினரை ஒன்றிணைத்து, அங்கிருந்த பல குறுநிலங்களை எல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து ஒரே பேரரசாகக் கட்டமைத்தார். புளூடூத் தொழில்நுட்பமும் அவரைப் போலவே தகவல்தொடர்பு நெறிமுறைகளை ஒரே தரநிலைக்குக் கொண்டு வரும் செயலைச் செய்கிறது என்பதால் இப்பெயர் வழங்கப்பட்டது.[2][3][4]
ஜெர்மானிய எழுத்துகளான (ஹகால்) (Hagall) மற்றும் (பெர்க்கனான்) (Berkanan) ஆகியவை இணைந்த இடாய்ச்சு இணைப்பெழுத்துக்களின் சேர்க்கையே புளுடூத் சின்னம் ஆகும்.
செயல்பாடு
புளுடூத்தில் அதிர்வெண்-துள்ளல் பரப்புக் கற்றை எனப்படும் ரேடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம் அனுப்பப்படும் தரவை பல துண்டுகளாக்கி அவற்றின் தொகுப்பை 79 வரையிலான அதிர்வெண்களின் மேல் வைத்து அனுப்புகிறது. அதன் அடிப்படைப் பயன்முறையில் காஸியன் அதிர்வெண்-மாற்றப் பண்பேற்றமே (Gaussian frequency-shift keying) பயன்படுத்தப்படுகிறது. அதன் அதிகபட்ச தரவு வீதம் 1 Mb/s ஆகும். கைபேசிகள், தொலைபேசிகள், மடிக்கணினிகள், தனிநபர் கணினிகள், அச்சுப்பொறிகள், உலகளாவிய வழிச்செலுத்தல் முறைமை (GPS) ஏற்பிகள், டிஜிட்டல் கேமராக்கள் மற்றும் வீடியோ கேம் தொடர்பு முனையங்கள் போன்ற சாதனங்கள் ஒன்றுக்கொன்று இணையவும் தகவல் பரிமாறிக் கொள்ளவும் புளுடூத் உதவுகிறது. இந்த முறையில் பாதுகாப்பான உலகளாவிய உரிமமற்ற தொழிற்துறை, அறிவியல், மருத்துவ (ISM) 2.4 GHz குறை வரம்பு ரேடியோ அதிர்வெண் கற்றையகலம் (short-range radio frequency bandwidth) பயன்படுத்தப்படுகிறது. புளுடூத் சிறப்பார்வக் குழு (Special Interest Group) (SIG) புளுடூத் குறிப்பு விவரங்களை உருவாக்கி உரிமம் வழங்குகிறது. புளுடூத் சிறப்பார்வக் குழு தொலைத்தொடர்பு, கணினி, நெட்வொர்க்கிங் மற்றும் நுகர்வோர் மின்னணுத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களைக் கொண்டது.[5]
பயன்கள்
புளுடூத் என்பது முக்கியமாக குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தி குறைவான எல்லைக்குள்ளான (ஆற்றல் வகையைப் பொறுத்து: 1 மீட்டர், 10 மீட்டர், 100 மீட்டர்) தகவல்தொடர்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு தரநிலையாகும். இது பயன்படுத்தப்படும் இரு சாதனங்களிலும் உள்ளமைக்கப்பட்டுள்ள குறைந்த விலை ட்ரான்சீவர் மைக்ரோசிப்களை அடிப்படையாகக் கொண்டது.[6] புளுடூத் உதவியால் இந்த சாதனங்கள் குறிப்பிட்ட தூர வரம்புக்குள் இருக்கும் போது அவை ஒன்றையொன்று தொடர்புகொள்ள முடியும். இந்தச் சாதனங்கள் ரேடியோ (அலைபரப்பு) தகவல்தொடர்பைப் பயன்படுத்துவதால் அவை ஒன்றுக்கொன்று தெரியும் படியோ அல்லது ஒன்றுக்கொன்று நேராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.[5]
வகை | அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச ஆற்றல் mW (dBm) | எல்லை (தோராயமாக) |
---|---|---|
வகை 1 | 100 mW (20 dBm) | ~100 மீட்டர் |
வகை 2 | 2.5 mW (4 dBm) | ~10 மீட்டர் |
வகை 3 | 1 mW (0 dBm) | ~1 மீட்டர் |
பெரும்பாலும் வகை 2 ஐச் சேர்ந்த சாதனங்கள் வகை 1 ஐச் சேர்ந்த ட்ரான்சீவருடன் (transceiver) இணைந்தால், வகை 2 ஐச் சேர்ந்த நெட்வொர்க்குடன் ஒப்பிடும் போது அவற்றின் எல்லையானது நீட்டிக்கப்படுகிறது. வகை 1 ஐச் சேர்ந்த சாதனங்களின் அதிக உணர்திறன் மற்றும் அலைபரப்புத் திறனின் காரணமாக சாத்தியமாகிறது.
பதிப்பு | தரவு வீதம் |
---|---|
பதிப்பு 1.2 | 1 Mbit/s |
பதிப்பு 2.0 + EDR | 3 Mbit/s |
பயன்பாடுகளின் பட்டியல்
புளுடூத்தின் பெரும்பாலான பயன்பாடுகளில் இவையும் அடங்கும்:
- ஒரு கைபேசி மற்றும் ஒரு ஹேண்ட்ஸ்ஃப்ரீ (hands-free) தலையணி ஆகியவற்றுக்கிடையேயான கம்பியில்லா கட்டுப்பாடு மற்றும் தகவல்தொடர்பு. இது முதலில் வந்த பயன்பாடுகளில் மிகப் பிரபலமான ஒன்றாகும்.
- PCகளுக்கு இடையேயான ஒரு வரையறுக்கப்பட்ட இடத்திற்குள்ளான, மற்றும் சிறிய கற்றையகலம் தேவைப்படக்கூடிய கம்பியில்லா வலையமைப்பு.
- PC உள்ளீடு மற்றும் வெளியீட்டு சாதனங்களுக்கிடையேயான கம்பியில்லா தகவல்தொடர்பு, இதில் மிகப் பொதுவானவை சுட்டி விசைப்பலகை மற்றும் அச்சுப்பொறிஆகியவையாகும்.
- OBEX கொண்டுள்ள சாதனங்களிடையே கோப்புகள், தொடர்பு விவரங்கள், நாள்காட்டி சந்திப்புத் திட்டங்கள் மற்றும் நினைவூட்டிகள் ஆகியவற்றின் பரிமாற்றம்.
- சோதனைச் சாதனம், GPS ஏற்பிகள், மருத்துவ உபகரணங்கள், பார் குறியீடு ஸ்கேனர்கள் (bar code scanners) மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு சாதனங்கள் ஆகியவற்றிலுள்ள பழைய கம்பியுள்ள தொடர் தகவல்தொடர்புகளின் இடமாற்றம்.
- வழக்கமாக அகச்சிவப்பு நுட்பம் பயபடுத்தப்பட்டு வந்த கட்டுப்பாடுகளுக்கு பயன்பாடாக உள்ளது.
- அதிக [USB] கற்றையகலம் தேவைப்படாத மற்றும் கேபிள்-இல்லாத இணைப்பு தேவைப்படுகின்ற குறைந்த கற்றையகலப் பயன்பாடுகளுக்குப் பயன்படுகிறது.
- புளுடூத் -செயலாக்கப்பட்ட விளம்பர ஹோர்டிங்களில் இருந்து, பிற கண்டுபிடிக்கப்படக்கூடிய புளுடூத் சாதனங்களுக்கு விளம்பரங்களை அனுப்பப் பயன்படுகிறது[மேற்கோள் தேவை].
- இரண்டு தொழிற்துறை ஈத்தர்நெட் (எ.கா., PROFINET) நெட்வொர்க்குகளிடையே ஒரு கம்பியில்லாப் பாலமாகப் பயன்படுகிறது.
- இரண்டு ஏழாம்-தலைமுறை கேம் தொடர்பு முனையங்கள் மற்றும் நிண்டெண்டோவின் வை (Nintendo's Wii) மற்றும் சோனியின் ப்ளேஸ்டேஷன் 3, ஆகியவை அவற்றின் கம்பியில்லா கண்ட்ரோலர்களுக்கு புளுடூத்தைப் பயன்படுத்துகின்றன.
- தனிநபர் கணினிகள் அல்லது PDAகளிலுள்ள டயல்-அப் இணைய அணுகலுக்கு ஒரு தரவு-கேபிள் கைபேசி மோடமாகப் பயன்படுத்தப்படுகின்றது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.