உன் கல்லறை அருகில் ஒரு இடம் கொடு
துடுப்பில்லாத தோணி போல்
துயரக் கடலில் மிதக்கின்றேன்
துணையாய் வந்த எந்தையே
நீண்ட தூக்கம் நீ சென்றதால்
இறுக்க உன் கரம்பற்றி நடந்தேன்
இறுதிவரை இருப்பாய் என்றெண்ணி
என் நடை தளர்ந்து போனது
உன் பற்றிய கரம் ஓய்ந்ததால்
என் தொலைபேசி அழைக்கும்போதெல்லாம்
உன் கனிந்த பாசக்குரல் கேட்க
ஓடோடி அங்கு வந்திடுவேன்
என்னை ராஜா என்று நீ அழைக்க
என் ஆவி கொள்ளை போவதுண்டு
உன் அன்பு குரல் கேட்காமல்
என் தூரிகை கூட எழுத மறுக்கிறது
நம்பிக்கை ஊட்டும் உன் குரல்
மௌனமாய் போனதால்
தும்பிக்கை இல்லா களிறு போல்
துவண்டு நான் கிடக்கின்றேன்
உன்னை கேட்காமல் என் பாதம் கூட
ஓரடி எடுத்து வைக்க மருளும்
உன்னை பார்க்காத நாளெல்லாம்
பல யுகமாய் எனக்கு தோன்றிடும்
இன்று உம் திருமுகம் காண முடியாமல்
எனக்கு உலகமே சூனியமாயிற்று
அழகான சிம்மாசனம் ஏற்படுத்தி
அதில் அமரவைத்து என்னை அழகு செய்தாய்
அருகில் வெண்சாமரமும் வீசி நின்றாய்
காவல் தெய்வமாய் நின்ற உனை
காலன் கூட்டி சென்றதால்
கலங்கி நின்றேன் நடை பிணமாய்
எனை காத்து நின்ற கர்த்தாவே
உனை கூட்டி சென்ற இடம் உரைப்பாய்
தேடி வந்திடுவேன் உன்னிடம்
இல்லையேல் பேதழிக்கும் என் மனம்
உன் கல்லறை அருகில் இடம் தந்தால்
இளைப்பாரிடும் என் மனம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.