விவிலியம்
விவிலியம் ( புனித வேதாகமம், பைபிள்), யூதர் மற்றும் கிறித்தவர்களது புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியம் ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு, உலகில் அதிகளவு மொழிகளுக்கு பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஒரே பெயரை கொண்டிருப்பினும் யூதரது மற்றும் கிறிஸ்தவரது விவிலியங்கள் வெவ்வேறானவையாகும். கிறித்தவரும் யூதரும் ஏற்றுக்கொள்ளும் விவிலியப் பகுதி கிறித்தவர்களால் பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிறது. அதை எபிரேய விவிலியம் என்றும் கூறுவர். கிறித்தவரும் யூதரும் விவிலியத்தைக் கடவுள் வெளிப்படுத்திய புனித வாக்கு என நம்புகின்றனர்.
இக்கட்டுரை கிறித்தவ விவிலியத்தைக் குறித்து மட்டுமே கருத்திற்கொள்ளும்.
உலகத்திலேயே திருவிவிலியம் எனும் 'பைபிள்' தான் அதிக மொழிகளில் (சுமார் 2,100) மொழிபெயர்க்கப்பட்ட நூல். அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட 1815ஆம் ஆண்டிற்குப் பின் சுமார் 500 கோடிக்கும் மேலான விவிலியப் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
விவிலியமானது பல தனி நூல்களின் தொகுப்பாகும். விவிலியத்தில் அடங்கியிருக்கும் நூல்களில் எவற்றை அதிகாரப்பூர்வமானவை என ஏற்பது என்பது குறித்து கிறிஸ்தவ பிரிவினரான கத்தோலிக்கர், கிழக்கு மரபுவழி திருச்சபையினர், சீர்த்திருத்தர்கள் ஆகியோரிடையே ஒத்த கருத்து கிடையாது. முக்கியமாக யெருசலேமின் இரண்டாவது ஆலயத்துக்குப் பின்னரான காலப்பகுதியின் இணைத் திருமுறை நூல்களை (The Deuterocanonical books) கத்தோலிக்க, கிழக்கு மரபுவழி மற்றும் சில சீர்த்திருத்த திருச்சபைகள் பழைய ஏற்பாட்டின் நூல்களாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளை பெரும்பாலான சீர்த்திருத்த திருச்சபைகள் இந்நூல்களை அதிகாரப்பூர்வமானவை என்று ஏற்றுக் கொள்வதில்லை. மேலும் இந்நூல்கள் யூதமத விவிலியத்திலும் காணப்படுவதில்லை. இச்சிறு வேறுபாடுகளை தவிர்த்தவிடத்து விவிலியத்தில் வேறு வேற்றுமைகள் இல்லை. மேலும் இணைத் திருமுறை நூல்கள் சேர்க்கப்படுவதாலோ அல்லது அவை நீக்கப்படுவதாலோ கிறிஸ்தவத்தின் அடிப்படைகள் மாற்றமடைவதில்லை.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.