இயேசு கிறித்து - பெயர் விளக்கம்
இயேசு என்னும் சொல் Iesus என்று அமைந்த இலத்தீன் வடிவத்திலிருந்தும், அதற்கு மூலமான Ἰησοῦς (Iēsoûs) என்னும் கிரேக்க வடிவத்திலிருந்தும் பிறக்கிறது. இந்த வடிவங்களுக்கு அடிப்படையாக இருப்பது எபிரேயப் பெயர். அது எபிரேய மொழியில் יְהוֹשֻׁעַ (Yĕhōšuă‘, Joshua) எனவும், எபிரேய-அரமேய மொழியில் יֵשׁוּעַ (Yēšûă‘) எனவும் அமைந்ததாகும். கடவுள் (யாவே) விடுதலை (மீட்பு) அளிக்கிறார் என்பதே இயேசு என்னும் சொல்லின் பொருள்.
கிறித்து (கிறிஸ்து) என்னும் சொல் திருப்பொழிவு பெற்றவர் (அபிஷேகம் செய்யப்பட்டவர்) என்னும் பொருளுடையது. அதன் மூலம் Χριστός (Christós) என்னும் கிரேக்கச் சொல். அது எபிரேய மொழியில் மெசியா מָשִׁיחַ (Messiah) என்று வழங்கப்படும் சொல்லின் மொழிபெயர்ப்பாகும் [2].
எபிரேய வழக்கப்படி, அரசர் மற்றும் இறைவாக்கினர் மக்களை வழிநடத்துகின்ற தலைமைப் பணியை ஏற்கும்போது அவர்கள் தலையில் எண்ணெய் வார்த்து, அவர்களிடம் அப்பணிப்பொறுப்பு ஒப்படைக்கப்படும். இயேசு கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப, கடவுளின் வல்லமையால் மனித குலத்தை மீட்டு அவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பைப் பெற்றார் என்னும் அடிப்படையில் கிறிஸ்து (மெசியா, திருப்பொழிவு பெற்றவர்) என அழைக்கப்படுகிறார். அவரை மெசியா என ஏற்று வணங்குவோர் அவர் பெயரால் கிறிஸ்தவர் (கிறித்தவர்) என அறியப்பெறுகின்றனர் (திருத்தூதர் பணிகள் 11:26).
[தொகு]இயேசுவின் வாழ்க்கை பற்றிய வரலாற்று ஆதாரம்
இயேசு கிறித்து என்னும் ஒரு மனிதர் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மத்திய ஆசியாவில் பாலசுதீன நாட்டில் யூத இனத்தில் பிறந்தார் என்றும், மக்களுக்குக் கடவுள் பெயரால் போதனை வழங்கினார் என்றும், சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்தார் என்றும், அவரது இறப்பிற்குப் பிறகு அவர் மீண்டும் உயிர்பெற்றெழுந்தார் என்னும் நம்பிக்கையில் அவர்தம் சீடர்கள் அவரைக் கடவுளாக ஏற்று வழிபட்டார்கள் என்றும் நாம் அறிகின்ற செய்தி விவிலியத்தில் உள்ளது.
இயேசுவின் வரலாறு பற்றிய செய்திகள் விவிலியத்திற்கு வெளியேயும் உள்ளன. அங்கே நற்செய்தி நூல்களில் வருகின்ற இயேசு, திருமுழுக்கு யோவான், யாக்கோபு, உரோமை ஆளுநன் பொந்தியு பிலாத்து, பெரிய குரு அன்னா போன்றோரின் பெயர்கள் காணப்படுகின்றன. இயேசுவின் வரலாற்றோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன.
இந்த இருவகை ஆதாரங்களையும் பின்வருமாறு சுருக்கமாக வடிவமைக்கலாம்.
[தொகு]அ) இயேசு பற்றி விவிலியம் தரும் ஆதாரம்
இயேசுவின் வாழ்க்கை வரலாறு பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முக்கிய ஆதார ஏடுகளாக இருப்பவை நான்கு நற்செய்தி நூல்கள் ஆகும். இவை கிறித்தவ விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில்அடங்கியுள்ளன. நான்கு நற்செய்தி நூல்களின் ஆசிரியர் முறையே மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்பது மரபு.
தற்போது வழக்கிலுள்ள கிரகோரியன் ஆண்டுக்கணிப்பு கி.மு., கி.பி. என்று, அதாவது, கிறித்துவுக்கு முன், கிறித்துவுக்குப் பின் என்றுள்ளது. ஆண்டவரின் ஆண்டுக்கணிப்பு (Anno Domini) என்னும் பெயரில் இக்கணிப்பு முறையை உருவாக்கியவர் சிரியாவில் 5-6ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்த தியோனிசியசு அடியார் (Dionysius Exiguus) என்னும் துறவி ஆவார் [3]. இவர் கணக்கிட்ட முறையில் ஒரு தவறு நிகழ்ந்ததால் இயேசுவின் பிறப்பு ஆண்டை ஒரு சில ஆண்டுகள் முன்தள்ளிப் போட்டுவிட்டார்.
இன்றும்கூட, கிறித்து பிறந்த ஆண்டும் நாளும் யாதெனத் துல்லியமாக அறிய இயலவில்லை. இயேசுவின் வாழ்க்கையையும் அவர் வழங்கிய போதனைகளையும் விரிவாகத் தருகின்ற புதிய ஏற்பாட்டுநூல்களிலிருந்தும் இத்தகவலைத் துல்லியமாகப் பெற முடியவில்லை. ஆனால் அந்நூல்கள் மட்டுமே இயேசுவின் பிறப்புப் பற்றி நாம் அறிகின்ற தகவல்களைத் தருகின்றன. இந்நால்வரில் மத்தேயுவும்லூக்காவும் இயேசுவின் பிறப்புப் பற்றிய விவரங்களை அளிக்கின்றனர்.
மத்தேயு நற்செய்திப்படி, "ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்" (மத்தேயு 2:1). வரலாற்று அடிப்படையில், பெரிய ஏரோது என்று அழைக்கப்படும் அரசன் கி.மு. 4ஆம் ஆண்டில் இறந்தான். இயேசு பிறந்த செய்தியைக் கேட்டதும் ஏரோது தன் ஆட்சியைக் கவிழ்க்க ஒருவர் பிறந்துவிட்டார் என்று கலக்கமுற்று, "பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்" என்று மத்தேயு நற்செய்தி குறிப்பிடுகிறது (காண்க: மத்தேயு 2:16). எனவே, மத்தேயு தருகின்ற மேலிரு தகவல்களையும் கவனத்தில் கொண்டால், ஏரோது இறப்பதற்கு முன்னால் இயேசுவுக்கு சுமார் 2 வயது ஆகியிருக்கும் என கணிக்கலாம். ஆக, இயேசு கி.மு. 6ஆம் ஆண்டளவில் பிறந்திருக்கலாம்.
லூக்கா நற்செய்திப்படி, "சிரியா நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள்தொகை கணக்கிடப்பட்ட" காலக்கட்டத்தில் இயேசு பிறந்தார் (காண்க: லூக்கா 2:1-7). குரேனியு மக்கள்தொகை கணக்கிட்டது கி.மு. 6ஆம் ஆண்டு என்று வரலாற்று ஏடுகளிலிருந்து தெரிகிறது. எனவே லூக்கா கணிப்புப்படியும் இயேசு கி.மு. 6ஆம் ஆண்டளவில் பிறந்திருக்கலாம்.
மத்தேயுவும் லூக்காவும் இயேசு ஏரோது அரசன் காலத்தில் பிறந்தார் என்று கூறுவதால் ஏரோது இறந்த ஆண்டாகிய கி.மு. 4ஆம் ஆண்டில், அல்லது அதற்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு பிறந்தார் என்பது பொருந்தும் என்பது வரலாற்றாசிரியர் கருத்து.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.