Wednesday, 25 July 2012

கிறித்து கற்பித்த செபம்


கிறித்து கற்பித்த செபம்


கிறிஸ்து கற்பித்த செபம் அல்லது கர்த்தர் கற்பித்த செபம் அல்லது பரலோக மந்திரம் (The Lord's Prayer) என்பது திருத்தூதர்கள் எப்படி செபிப்பது என இயேசுவிடம்கேட்டபோது அவர் சொல்லிக்கொடுத்த செபமாகும். விவிலியத்தில் மத்தேயு 6:9-13 ஆம் வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. சற்றே சுருக்கமான வடிவத்தில் இந்த இறைவேண்டல் லூக்கா 11:2-4 பகுதியில் உள்ளது. எல்லா கிறிஸ்தவரும் இச்செபத்தை உச்சரிக்கின்றபோதும், கத்தோலிக்கர் அதிகமாக பாவித்துவருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் கத்தோலிக்க கோவில்களில் நிகழ்கின்ற திருப்பலியின்போது குருவும் மக்களும் நற்கருணை விருந்தில் பங்கேற்பதற்கு முன் இச்செபத்தை அறிக்கையிடுகின்றனர். மேலும், அன்னை மரியாவின் புகழ் சாற்றுகின்ற செபமாலை செபிக்கும்போதும், ஒவ்வொரு பத்துமணியின் தொடக்கத்திலும் இச்செபம் அறிக்கையிடப்படுகிறது.

நற்செய்தி வடிவம்

கிறிஸ்து கற்பித்த செபத்தின் வசன நடை இடத்துக்கு இடம் வேறுபட்டாலும் அடிப்படையான பொருள் மாறுவது இல்லை. கைகளை விரித்து வான்நோக்கி உயர்த்தியபடியோ, குழுவாக உச்சரிக்கும் போது அருகிலுள்ளவரின் கையை பிடித்து ஒருமனித சங்கிலி அமைத்தவாறோ இச்செபத்தை சொல்வது வழக்கமாகும்.
இச்செபம் மத்தேயு 6:9-13 -இன் படி
"விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல
மண்ணுலகிலும் நிறைவேறுக!
இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை
நாங்கள் மன்னித்துள்ளதுபோல
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,
தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்.
('ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.')"[2]
இச்செபம் லூக்கா 11:2-4 -இன் படி
"தந்தையே,
உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
. . . . . . .
. . . . . . .
எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால்
எங்கள் பாவங்களையும் மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
(தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.)[3]"
. . . . . . .
. . . . . . .


வழக்கு வடிவங்கள்

திருவிவிலியம் - பழைய மொழிபெயர்ப்பின்படி
வழக்கில் உள்ள நடைமுறை வடிவம்:
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக;
உம்முடைய இராச்சியம் வருக;
உம்முடைய சித்தம்
பரலோகத்தில் செய்யப்படுவது போல
பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை
எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்களுக்குத் தீமை செய்தவர்களை
நாங்கள் பொறுப்பது போல
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களை சோதனையில் விழவிடாதேயும்,
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.

ஏழு மன்றாட்டுகள்

ஏனைய மொழிகளுடன் தமிழ் மொழியில் கிறித்து கற்பித்த செபம் அடங்கிய சுவர்க் கற்பதிகை - எங்கள் பிதாவே தேவாலயம், எருசலேம், இஸ்ரவேல்
இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்த செபத்தில் மொத்தம் ஏழு மன்றாட்டுகள் அடங்கி இருக்கின்றன. அவற்றில் முதல் மூன்றும் இறைவனின் திருவுளம் பற்றியும், அடுத்த நான்கும் மனிதரின் தேவை பற்றியும் செபிப்பதாக அமைந்துள்ளன. இந்த இறைவேண்டலின் அமைப்பு பின்வருமாறு:
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, - இறைவனை அழைக்கும் தொடக்க விளிப்பு.
1. உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! - இறைவனின் பெயர் போற்றப்பட வேண்டுகிறோம்.
2. உமது ஆட்சி வருக! - இறைவனின் ஆட்சி நம்மிடையே வர செபிக்கிறோம்.
3. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக! - இறைவனின் திருவுளம் நிறைவேற வேண்டுகிறோம்.
4. எங்கள் அன்றாட உணவை, இன்று எங்களுக்குத் தாரும். - நமக்கு இன்றைய உணவு கிடைக்க செபிக்கிறோம்.
5. எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். - நாம் மன்னிக்கவும், மன்னிக்கப்படவும் வேண்டுகிறோம்.
6. எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். - சோதனைகளில் உட்படாமல் இருக்க செபிக்கிறோம்.
7. தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். - தீயோனாகிய அலகையிடம் இருந்து தப்பிக்க வேண்டுகிறோம்.
ஆமென். - ஆம், அப்படியே ஆகட்டும் என்று பொருள்.
திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பின்படி
தற்போது மாற்றப்பட்டுள்ள புதிய வடிவம்:
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம்
விண்ணுலகில் நிறைவேறுவது போல
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.