Saturday 28 July 2012

தாலி


தாலி


தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு. தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது. பெண்ணிய பார்வையில் ஆண்கள் தாம் திருமணமானவர் என்பதை வெளிப்படுத்த எந்தவொரு குறியீடும் இல்லாமல் பெண்ணிடம் தாலி, குங்குமம், மெட்டி என்று குறியீடுகளைத் திணிப்பது ஒர் ஆண் ஆதிக்க செயற்பாடாக பார்க்கப்படுகிறது.[1]

பெயர்காரணம்

தாலியின் வடிவம் சாதிக்கு சாதி மாறுபடுகிறது
தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான். (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.
இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது. சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி என சொல்லும் தாலியை - மண அடையாள வில்லையைக் குறிக்கும்

இந்து முறை

கூறை உடுத்தி வந்த மணமகள், மணமகனின் வலப்புறத்தில் கிழக்கு நோக்கி அமர்வார். குறித்த சுபமுகூர்த்ததில் மணமகன் எழுந்து மணமகளின் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதிதுக் கொடுக்கும் மாங்கல்யத்தை இரு கரங்களால் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதித்து கொடுக்கும் மாங்கல்யத்தை (தாலி) இரு கரங்களால் பற்றி கெட்டிமேளம் முழங்க, வேதியர் வேதம் ஓத, மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் தேங்காய் உடைக்க, பெரியோர் அட்சதை மலர்கள் தூவ, ஒரு பெண் பின்னால் தீபம் பிடிக்க மணமகன் மேற்கு திசை நோக்கி திரும்பிப் பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டுவார். அப்போது சொல்லப்படும் மந்திரம்
“மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவசரதசதம்”
‘ஓம்! பாக்கியவதியே’ யான் சீரஞ்சீவியாக இருப்பதற்கு காரணமாக மாங்கல்யத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீயும் நூறாண்டு வாழ்வாயாக என்று குருக்கள் கூறும் மந்திரத்தை மனதில் கொண்டு தாலி முடிச்சில் திருநீறு இட்டு தனது இடத்தில் இருக்க வேண்டும். மணமகளின் உச்சந்தலையில் குங்குமத்தில் திலகமிட வேண்டும்.

தாலி விளக்கம்

தாலி என்ற சொல்லிற்குப் பலரும் “மணமகளுக்குத் திருமணத்தில் மணமகன் அணிவிக்கும் கலன்” என்றே விதப்பாகப் புரிந்து கொள்ளுகிறார்கள். ஆனால் அது மட்டுமே பொருட்பாடல்ல; வேறு சிலவும் இந்தச் சொல்லிற்கு உண்டு. சரியாகச் சொன்னால், “வளமை (prosperity), பிறக்கம் (fertility)” ஆகியவற்றைக் குறிக்கும் வகையில், வெவ்வேறு பெயர்கள், வெவ்வேறு ஆட்களுக்கு அணிவிக்கும் ஒரு கலனாகவே தாலி என்னும் பொதுமைச் சொல்லைப் புரிந்து கொள்ள வேண்டும். தாலி என்னும் பொதுமைச் சொல்லோடு வெவ்வேறு சொற்களை முன்சேர்த்து, ‘மங்கலத் தாலி, ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தாலி), புலிப்பல் தாலி, புலிநகத் தாலி’ என்றெல்லாம் பலவிதக் கூட்டுச்சொற்களை பழந்தமிழர் உண்டாக்கி இருக்கிறார்கள்.
பேச்சு வழக்கில், ஓர் இயல்மொழியில் ஏற்படும் சொல்லாக்க முறைகளின் அடிப்படையைச் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும். ஒரு கருத்தைக் குறிக்கும் ஓரகைச் (unique) சொற்கள் விதப்பாகத் தான் ஓர் இயல்மொழியில் முதலில் எழுகின்றன. பின்னால் இது போன்றதொரு இன்னொரு விதப்பும் அதே கருத்தைச் சுட்டிக் காட்டும் போது, முன்னால் குறித்த விதப்புச் சொல் பேச்சு வழக்கில் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பொதுமைச் சொல்லாகி விடுகிறது. அடுத்த சுற்றில், மேலும் ஒரு பெயரடையை அதற்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்தி இன்னும் பல விதப்புச் சொற்கள் புடைத்து எழுகின்றன. தாலி என்பது மஞ்சள் பொருத்திய நாணை முதலில் குறித்திருக்க வேண்டும்; பின்னால் செல்வம் படைத்தோரால் அந்த மஞ்சள் பொன்னாகி இருக்கிறது. (உடனே பொன் தான் தாலியின் அடையாளம் என்று நாம் பொருள் கொள்ளக் கூடாது. மஞ்சள் தான் அதன் அடையாளம்.) அடுத்த வளர்ச்சியில் இன்னும் பல விதப்புப் பயன்பாடுகள் பெருகியபின்னால், ‘மணமகளுக்கு திருமணத்தில் மணமகன் அணிவிக்கும் கலனை’ விதப்பாகக்’ குறித்த ‘தாலி’ பொதுமைச் சொல்லாகி, நல்ல எண்ணெய் போல, மங்கலத் தாலி என்று விதப்பு வழக்கை உருவாக்கியிருக்க வேண்டும்.
மற்ற விதப்புப் பயன்பாடுகளாய், ‘ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தாலை), புலிப்பல் தாலி, புலிநகத் தாலி’ போன்றவையும் புழக்கத்திற்கு வந்திருக்கின்றன.

சில துளிகள்

தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954-ல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இதைத் தொடங்கி வைத்தவர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் ம.பொ.சி மட்டுமே!
'கி.பி. 10-ம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலிப் பேச்சே கிடையாது' - வரலாற்று ஆய்வறிஞர் அப்பாத்துரையார்.
'பழந்தமிழர்களிடத்தில் தாலி வழக்கு இல்லவே இல்லை' - பெரும்புலவர் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனார்.
கி.பி. 7-ம் நூற்றாண்டில் திருமண சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பேச்சே கிடையாது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதைபொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.
கி.பி. 10ம் நூற்றாண்டிற்கு பிறகே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாக கொள்ளலாம்.
இந்திய சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும், எழுதவும் துவங்கினார். அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின.
பின்னர், 1968-ல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லா திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது.




No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.