ஐயனார் அல்லது அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம். பழங்காலம் தொட்டே ஐயனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. குறிப்பாக மதுரையிலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஐயனார் வழிபாட்டைச் சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.
ஐயனார் வழிபாடு பிராமணிய இந்து சமய வழிபாட்டு முறைகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பாக பிராமணப் பூசாரிகள் ஐயனார் கோவில்களில் பூசைகள், சடங்குகள் செய்வதில்லை.
சிவனுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணுவுக்கும் பிறந்தவர் ஐயனார்.
தோற்றம்
தாருகாவனத்திலே மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக வேள்வியைக் குலைக்க வேண்டியிருந்தது. இதற்காகப் பரமேசுவரன் பிட்சாடனர் உருவமும், விஷ்ணு மோகினி உருவமும் கொண்டனர். பிட்சாடனர் மகரிஷிகளின் பத்தினிகள் வாழும் வீட்டுத் தெருக்களிலே சென்று பிச்சை கேட்டார். அவரது தோற்றத்தைக் கண்டவர்களின் மனத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது.
மோகினியானவள் ரிஷிகள் வேள்விகள் செய்யும் இடத்திற்குச் சென்று அவர்களின் மனத்தை அலைபாயச் செய்தார். இதனால் வேள்வி தடைபட்டது.
ஆனால், பிட்சாடனர் மோகினியின் உருவத்தில் காமமுற்று அவளை அடையவேண்டி விரட்டிச் சென்றார். அப்போது காட்டுக்குள்ளே கண்மாய்க்கரையில் பிறந்தவர் ஐயனார் அல்லது சாஸ்தா ஆவார்.
ஐயனார் மாசி மாதம் தேய்பிறையில் அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி அன்று பிறந்தார்.
வடிவம்
ஐயனார் கிழக்குத் திசை நோக்கி அமர்ந்திருப்பார். மார்பில் பூணூல் அணிந்திருப்பார். இளைஞரைப்போன்றவர். கீரீடம் அணிந்திருப்பார். வலது காதில் குழையும் இடதுகாதில் குண்டமும் அணிந்திருப்பார், மற்றும் சர்வேசுவரனுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார். சந்தனம் பூசியிருப்பார். வலதுகையில் தண்டம் அல்லது தடி வைத்திருப்பார். இடதுகையை இடதுகாலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார், இடதுகாலை மடித்து பீடத்தின் வைத்துக்கொண்டு வலதுகாலை கீழே தொங்கவிட்டிருப்பார்.
கண்மாய்க்கரை அல்லாத இடங்களில் உள்ள ஐயனார் நின்றபடி இருப்பார். ஐயனார் நிற்கும் கோயில்களில் தேவியர்களும் நின்றபடி இருப்பர்.
தேவியர் இருவர்
சிறப்பான காரணகாரியங்கள் கருதி சில ஊர்களில் தேவியர்களுடன் சேர்ந்திருக்காமல், ஐயனார் தனித்தும் இருக்கிறார். இவ்வாறாகத் தனித்து இருக்கும் ஐயனாரை பாலசாஸ்தா என்று அழைக்கின்றனர்.
பொதுவாக, ஐயனாருக்குப் பூர்ணாதேவி, புஸ்கலாதேவி என இரண்டு தேவியர் உள்ளனர், ஐயனார் தேவலோகத்தைச் சேர்ந்தவர். பூலோகத்தில் அவதரித்தவர். எனவே தேவலோகத்தைச் சேர்ந்த புஸ்கலாதேவியும் பூலோகத்தைச் சேர்ந்த பூர்ணாதேவியும் துணைவியராக உள்ளனர்.
ஐயனாரின் அருகில் உள்ள கையில் மலரைப் பிடித்தபடியும், ஐயனாரின் அருகில் உள்ள காலை மடித்துப் பீடத்தின் மீது வைத்துக் கொண்டு மற்றொரு காலைக் கீழே தொங்கவிட்டபடியும் அமர்ந்திருப்பர்.
புஷ்கலை என்றால் பூவைப் போன்ற பண்புடையவள் என்று பொருள். பூரணம் என்றால் நிறைவு, பௌர்ணமி என்று பொருள் எனவே, பூரணை என்றால் மனநிறைவானவள் முழுமதி போன்றவள் என்று பொருளாகும்.
பாரிவார தெய்வங்கள்
இந்திரன், அக்னி, எமதர்மன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானியன் ஆகிய எட்டு திசை தெய்வங்களும், யோகிகள், சித்தர்கள், வித்யாதர்கள், கின்னரர்கள் முதலியோர் ஐயனாரை வணங்கியபடி இருப்பர்.
ஐயனாரின் பரிவார தெய்வங்களாக கருப்பணசாமி,வீரபத்திரர்,இடும்பன், நடுக்காட்டான், நடாள், ஆண்டி, நொண்டி, இருளப்பன், சின்னான், சன்னாசி, மூக்கன் மற்றும் சோணை முதலிய ஆண் தெய்வங்களும்,செல்லியாய்,காளி, நீலி, ராக்காயி, ராக்கச்சி, கருப்பாயி, சடைச்சி, இருளாயி, செகப்பி, மூக்காயி, பேச்சி, ஏழைகாத்த அம்மன் மற்றும் சப்த (ஏழு) கன்னியர்கள் முதலிய பெண்தெய்வங்களும் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.
நாய், ஆடு, மயில், கோழி இவைகள் ஐயனாருடன் இருக்கும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.