
தற்போது பேட்டரியால் இயங்கும் நவீன ரக பொம்மைகள் வந்து விட்டன. ஆனால், இரண்டு தலைமுறைக்கு முன்னர் வரை குழந்தைகள் விளையாட மரப்பாச்சி பொம்மைகள் மட்டுமே இருந்தன. இந்த பொம்மைகள் வெறும் விளையாட்டுச் சாதனங்களாக மட்டுமல்லாமல், குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணிக் காத்திடும் மருத்துவ குணம் கொண்டதாகவும் திகழ்ந்தன. இன்றைக்கு கூட்டுக் குடும்பம் என்ற தத்துவமே மறைந்து போய்விட்ட நிலையில், அக்காலத்தில் மரப்பாச்சி பொம்மைகளை வைத்து, குடும்ப உறவு முறைகளை குழந்தைகளுக்கு எடுத்துக் கூறினர். தாத்தா, பாட்டி, தாய், தந்தை, மகன், மகள் என உறவு முறைகளை விளக்கும் பொம்மைகளும், சுற்றுச்சூழலை விளக்கும் வகையில் பறவைகள், விலங்குகள் பொம்மைகளும் தயார் செய்யப்பட்டன.
மரப்பாச்சி பொம்மைகளை, 'ஈட்டி' மரத்தால் செய்தனர். மருத்துவ குணம் கொண்ட, 'ஈட்டி' மரத்தால் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மைகளால், குழந்தைகளுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. தற்காலத்தில், மரப்பாச்சி பொம்மைகளின் பயன்பாடு மறைந்துவிட்டது. ஈட்டி மரங்கள் அழிவு; பொம்மை செய்யும் தச்சர்கள் மற்றும் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவு போன்ற காரணங்களால், மரப்பாச்சி பொம்மைகளின் உற்பத்தி அடியோடு நின்று விட்டது.
ஆந்திராவில் திருப்பதியிலும், மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்திலும், சில குக்கிராமங்களிலும் மரப்பாச்சி பொம்மைகள் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. தொட்டிலில் கட்டுவதற்கும்,கோவில்களில் நேர்த்திக் கடன் செலுத்துவதற்கும் பயன்படுவதால் தான், இன்னும் மரப்பாச்சி பொம்மைகள் முற்றிலும் அழியாமல் உள்ளன.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.