Monday, 17 September 2012

தந்தை பெரியாரின் புரட்சி மொழிகள்

Photo: சமூக மருத்துவர் தந்தை பெரியார்

அவருடைய உழைப்பு, அவருடைய எண்ணம் அனைத்தும் இந்த மக்களுக்காகவே இருந்தன. ஏறத்தாடி 40 ஆண்டுகள் தன் உடல் நலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வயிற்று வலியைப் பற்றிக் கவலைப்படாமல் இந்த மண்ணுக்காக மக்களுக்காகத் தினந்தோறும் உழைத்துக் கொண்டிருந்த ஒரு மாமனிதர் தந்தை பெரியார். அவர் இறந்து போய் இத்தனை ஆண்டுகள் ஆனதற்குப் பிறகும் அந்த நிகழ்வுகள் நம் நினைவுக்கு வருகின்றன.

1973 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் நாள் தந்தை பெரியார் அவர்கள் மறைந்த நாள். மறைவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு வரையில்கூட அவர் பொதுக்கூட்டங்களிலே பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசிய இறுதிக்கூட்டம் அதே டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி சென்னையிலே இருக்கிற தியாகராயநகரிலே நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அவருடைய பேச்சை ஒலிநாடாவிலே கேட்கிறவர்கள் ஒரு செய்தியைக் கவனிக்க முடியும். பேச்சுக்கு இடையிலே இடையிலே அவர் வயிற்று வலியாலே துன்பப்படுவதும், அந்தத் துன்பத்தை ‘அம்மா அம்மா’ என்கிற குரலில் அவர் வெளிப்படுத்துவதும், மிகப்பெரிய வருத்தத்தைத் தருகிற ஒரு நிகழ்வாக இருக்கும்.

அவர் அம்மா என்று ஒலி எழுப்புவதுகூட கூர்ந்து கவனித்துப் பார்த்தால், அம்மா அம்மா என்று வயிற்றுவலியால் துடிக்கிற குரலாக இருக்காது. அம்ம்மா… அம்ம்மா என்று வயிற்றுவலியை அடக்குகிற குரலாகத் தான் இருக்கும். அவர் அப்படி வயிற்று வலியை ஒரு நாற்பது நிமிடங்கள் அல்லது 4 மணி நேரங்கள் அடக்கிக் கொண்டிருந்தார் என்று நாம் கருதக் கூடாது. 40 ஆண்டுகள் அந்த வயிற்று வலியோடு அவர் போராடிக் கொண்டிருந்தார். 1930… 40களிலே எல்லாம் கூட அவர் அந்த வயிற்று வலிக்காக மருத்துவமனைகளிலே அனுமதிக்கப் பட்டிருந்ததை அவருடைய வாழ்க்கை வரலாற்று குறிப்புக்களைப் பார்க்கிறபோது நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

கடுமையான வயிற்றுவலியோடு ஏறத்தாடி 40 ஆண்டுகள் போராடிக் கொண்டு, இந்த மக்களுக்காக அறிவுப் பூர்வமாக செய்திகளையும் சொல்லிக் கொண்டிருந்த மாமனிதர் அவர். 1943ஆம் ஆண்டு அதாவது அவர் இறந்து போவதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், அதே வயிற்றுவலியினால் துன்பப்பட்டு மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் என்ன செய்தார் என்பதை அன்றைக்கு அவருக்குத் தனிச் செயலாளராக இருந்த புலவர் இமயவரம்பன் அவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். 43-ஆம் ஆண்டு கடுமையான வயிற்று வலிக்காகக் சென்னையிலே இருக்கிற பொது மருத்துவமனையிலே ஐயா அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். டாக்டர் குருசாமி முதலியார் என்ற ஒரு புகழ்பெற்ற மருத்துவர், ஐயாவினுடைய உடல் நலத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். மிகக் கவனமாக மிகுந்த பாசத்துடன் அவரை அந்த மருத்துவர் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

திடீரென்று ஐயாவுக்கு நினைவு வருகிறது. நாளை சென்னையிலே இருக்கிற தியாகராய நகரில் பனகல் பூங்காவிற்கு அருகிலே ஒரு கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டத்திற்கு ஏற்கனவே அவர் ஒப்புதல் அளித்திருக்கிறார். மெதுவாக மருத்துவரை அழைத்து நான் இன்னும் எத்தனை நாள் இந்த மருத்துவமனையிலே இருக்கனுங்க… என்று கேட்கிறார். எப்படியும் ஒரு வாரமாவது நீங்க இருக்கணும், ஒரு நான்கு நாட்களாவது குறைந்தது இருக்க வேண்டியது இருக்கும் என்று சொல்கிறார்கள். அவருக்குக் கவலையாக இருக்கிறது. தோழர்கள் பணமெல்லாம் செலவு செய்து கூட்டத்தைப் பெரிய அளவிலே ஏற்பாடு செய்திருப்பார்களே, கூட்டத்திற்குப் போகாமல் எப்படி இருப்பது என்பதே அவருக்குப் பெரிய மன உளச்சலாக இருக்கிறது.

அடுத்த நாள் பெரிய மருத்துவரான டாக்டர் குருசாமி முதலியார் அவர்கள் அந்த மருத்துவமனையை விட்டுப் போனதற்குப் பிறகு, பக்குவமாக, அன்றைக்கு அங்கு மருத்துவரை அழைத்து ஒரு சின்னச் செய்தியை பெரியார் சொல்லுகிறார், “ஐயா, வீட்லே சில முக்கியமான பொருள்களையும், புத்தகத்தையும் எடுக்க வேண்டியதிருக்கு…” என்கிறார். உடனே அந்த மருத்துவர் யாரையாவது அனுப்பி எடுத்துவரச் சொல்லலாமா என்கிறார். இல்லீங்க நான் போனாத்தான் அதைக் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்.

“இவர் போனாத்தான் கூட்டத்திலே பேச முடியும்” அதுதான் செய்தி. நான் போனாத்தான் எடுக்க முடியும், ஆகையினால நீங்க சீப் டாக்டர் கிட்ட சொல்ல வேண்டாம் ஒரு இரண்டு மணிநேரம் ஐயா அனுமதி கொடுத்தீங்கன்னா நான் வீட்டுக்குப் போய் எடுத்துட்டு வந்தர்ரேன், ரொம்ப முக்கியமான புத்தகங்க என்று சொல்கிறார். அந்த மருத்துவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை, அவர் வயதிலே இளையவர். பெரியவர் சொல்லுகிறபோது நாம் என்ன செய்வது.. சரி போயிட்டு ஒரு 2 மணி நேரத்துல வந்திருங்க என்று சொல்கிறார். நான் வந்திடுறேனுங்க. 8 மணிக்கெல்லாம் வந்திடுறேனுங்க என்று சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டு நேராகப் பனகல் பூங்காவிற்கு வந்து கூட்டத்திலே கலந்து கொள்கிறார்.

கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கும், மக்களுக்கும் பெரிய மகிழ்ச்சி… ஆரவாரம். ஐயா பெரியார் பேசுகிறார், பேசத் தொடங்கிய பிறகு அவருக்கு அந்த நேரம் காலம் எல்லாம் நினைவிலே இல்லை. பேசிக்கொண்டே இருக்கிறார். ஏறத்தாற 10 மணி ஆகிவிட்டது. திடீரென்று தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது 10 மணி ஆகி விட்டதே என்ற பதற்றத்தோடு அந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பவும் மருத்துவமனைக்கு வருகிறார். கொஞ்சம் தாமதமாக வந்து சேருகிறார். ஆனால் அடுத்த நாள் என்னாயிற்று என்றால், இவர் ரகசியமாக செய்த காரியம் பத்திரிகைகளிலேயெல்லாம் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஆவேசமான பேச்சு என்று செய்தியாக வெளியே வருகிறது.

அதைப் பெரிய மருத்துவர் குருசாமி முதலியார் பார்த்து விட்டு என்னடா இது, ஐயா பெரியார் மருத்துவமனையிலே இருக்கிறார். நேற்றைக்கு பனகல் பூங்காவிலே பேசினார் என்று செய்தி வருகிறதே என்று புரியாமல் மருத்துவமனைக்கு வந்து அன்றைக்குப் பொறுப்பிலே இருந்த மருத்துவரை, அந்த செவிலியர்களை எல்லாம் எப்படி நேற்று ஐயா கூட்டத்துக்குப் போனார், யார் அனுமதித்தீர்கள் என்று கேட்ட உடனே அவர்களெல்லாம் மிகவும் நடுங்கிப் போனார்கள். மருத்துவரும் மிகக் கோபமாக இருக்கிறார். ஐயாவைப் பார்க்கக்கூட வரவில்லை.

மறுபடியும் மதியம் இரண்டு மணிக்கு வருகிறபோது தந்தை பெரியார் அவர்கள் மருத்துவர் கோபமாக இருக்கிறார். மற்ற மருத்துவர்களையெல்லாம் கோபித்துக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு, அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டு, “ஐயா மன்னிச்சுக்கோனுங்க… நான்தானுங்க அப்படிச் சொல்லிட்டுப் போயிட்டேன். அந்த மருத்துவர் மேல தப்பில்லீங்க… நான்தானுங்க அந்தக் கூட்டத்துக்காக அப்படி ஒரு பொய்ய சொல்லிட்டுப் போயிட்டனய்யா… ஐயா கோவிச்சுக்கக் கூடாது” என்று சொன்னபோது, குருசாமி முதலியார் சொன்னாராம் “ஐயா உண்மையிலேயே கோபப்படுவது எதற்காக என்றால் நீங்க இன்னும் ரொம்ப நாள் வாழணும். இந்த நாட்டில் நீங்கள் செய்ய வேண்டிய காரியம் ஆயிரம் இருக்கிறது.

எனவே உங்கள் உடல் நலம் பற்றிய கவலையிலதான்யா நான் சொல்றேன். உண்மையாகச் சொன்னா நான் மருத்துவரும் நீங்கள் நோயாளியுமல்ல… எனவே நீங்கள் நெடுநாள் இருக்க வேண்டும். நீங்கள் இருந்தால்தான் இந்த நாட்டுக்கும், இந்தச் சமூகத்துக்கும் நல்லது” என்று அவர் கவலைப்பட்டுச் சொல்லியுள்ளார்.

ஏறத்தாற 40 ஆண்டுகள் தன் உடல் நலத்தைப் பற்றிக் கவலைப்படாமல்… வயிற்று வலியைப் பற்றிக் கவலைப்படாமல் இந்த மண்ணுக்காக… மக்களுக்காக தினந்தோறும் உழைத்துக் கொண்டிருந்த ஒரு மாமனிதர் தந்தை பெரியார். அவர்கள் இறந்து போய் இத்தனை ஆண்டுகள் ஆனதற்குப் பிறகும் அந்த நிகழ்வுகள் நம் நினைவுக்கு வருகின்றன. அவருடைய உழைப்பு, அவருடைய எண்ணம் அனைத்தும் இந்த மக்களுக்காகவே இருந்தன. சிலர் பொய் சொல்லிவிட்டு வெளியே போவார்கள். அவர்கள் வேறு வேறு நோக்கங்களுக்காகப் போவார்கள். ஆனால் பொதுநல நோக்கத்திற்காக, மக்களுக்காக மருத்துவமனையிலேயிருந்து வெளியே வந்து பொதுக்கூட்டத்திலே பேசி விட்டு மறுபடியும் போன மனிதர் ஐயா பெரியார் அவர்களாகத் தான் இருக்க முடியும்.

(ஒன்றே சொல்! நன்றே சொல்! நூலிலிருந்து)

//சுப.வீரபாண்டியன் 
* மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
* பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி
* மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்
* விதியை நம்பி மதியை இழக்காதே.
* மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.
* மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.
* பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.
* பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்
து.
* பக்தி இல்லாவிட்டால் இழ்ப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
* தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்
* கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
* பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.
* ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
* ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.
* வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.
* ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
* என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.
* எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவை கொண்டு ஆராச்சி செய்து, சரியென்று பட்டபடி நட என்பதேயாகும்.
* மற்றவர்களிடம் பழகும் வித்த்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.