Thursday, 20 September 2012

அரவான்


சிங்கப்பூர், மாரியம்மன் கோவிலில் வணங்கப்படும் அரவான். பாம்பு வடிவில் உள்ள தலைமறைப்பு அரவானின் தலைக்குப் பாதுகாப்பாக உள்ளது.
அரவான் இந்து காப்பியமான மகாபாரதத்தில் தோன்றும் ஒரு சிறிய கதாபாத்திரம். இவர் இரவன், இராவத் மற்றும் இராவந்த் என்றும் அறியப்படுகிறார். அரவான் பாண்டவ இளவரசன் அருச்சுனன் (மகாபாரதத்தின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவர்) மற்றும் நாக இளவரசி உலுப்பி ஆகியோரின் மகன். அரவான் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் முக்கியக் கடவுளாக உள்ளார். ”கூத்தாண்டவர்” என்பது இந்த வழிபாட்டு மரபில் அரவானுக்கு வழங்கப்படும் பொதுவான பெயர். திரௌபதி வழிபாட்டு மரபிலும் இவர் முக்கியப் பங்கு வகிக்கிறார். இந்த இரண்டு வழிபாட்டு மரபுகளும் தென்னிந்தியாவில் அரவானைக் கிராம தெய்வமாக வழிபடும் பகுதிகளிலிருந்து தோன்றியவை. அரவான், அலி என்று அழைக்கப்படும் திருநங்கைகள் (இவர்கள் தென்னிந்தியாவில் அரவாணி என்றும், தெற்கு ஆசியா முழுவதும் ஹிஜிரா என்றும் அறியப்படுகின்றனர்) சமூகத்தின் காவல் தெய்வமுமாவார்.
மகாபாரதக் காப்பியத்தின் முக்கியக் கருப்பொருளான, 18 நாட்கள் நடைபெற்ற குருட்சேத்திரப் போரில் (மகாபாரதப் போர்) அரவான் வீரமரணம் அடைவதாக மகாபாரதம் சித்தரிக்கிறது. போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்குக் காளி அருள் வழங்க வேண்டும் என்பதற்காக அரவான் தன்னையே பலி கொடுத்ததைச் சிறப்பிக்கும் மரபும் தென்னிந்திய சமூகத்தில் உள்ளது. தன்னையே பலி கொடுத்ததற்காகக் கிருஷ்ணர் அரவானுக்கு வழங்கிய மூன்று வரங்களில் ஒன்றே கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் மையமாக உள்ளது. அரவான், தான் இறப்பதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். மோகினி என்ற பெண் வடிவமாக மாறி கிருஷ்ணர் அரவானின் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்வு, தமிழ்நாட்டில் உள்ள கூவாகம் என்ற இடத்தில் 18 நாள் திருவிழாவில் நினைவுகூரப்படுகிறது. இதில் முதலில் அரவானை திருநங்கைகளுக்கும் அந்த ஊரைச் சேர்ந்த அவருக்கு நேர்ந்துவிடப்பட்ட ஆண்களுக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். அடுத்து அரவான் பலியிடல் நிகழ்த்தப்பட்டபின்னர் அவர்கள் விதவைக் கோலம் கொள்கின்றனர்.
தனது வெட்டுண்ட தலையில் உள்ள கண்களின் மூலம் மகாபாரதப் போர் முழுவதையும் பார்ப்பதற்குக் கிருஷ்ணர் அரவானுக்கு வழங்கிய மற்றொரு வரத்தைத் திரௌபதி வழிபாட்டு மரபு மையமாகக் கொண்டுள்ளது. மற்றொரு 18 நாள் திருவிழாவில், மகாபாரதப் போரைச் சித்தரிக்கும் சடங்குகளைப் பார்க்கும் வண்ணம் அரவானின் தலை கம்பத்தின் மேல் உயர்த்தி வைக்கப்படும். அலங்காரம் செய்த அரவானின் தலையே திரௌபதி கோவில்களிலுள்ள பொதுவான கடவுள் உருவமாகும். பெரும்பாலும் இந்தத் தலைகள் எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய வகையில் மரத்தால் செய்யப்பட்டவையாக இருக்கும். சிலநேரங்களில் கோவில் வளாகத்தில் இந்தத் தலைக்கு என்று சிறு கோவில் அமைக்கப்பட்டிருக்கும் அல்லது தீய சக்திகளிலிருந்து பாதுகாக்கும் காவலாகக் கோவில் கூரைகளின் மூலையில் அமைக்கப்பட்டிருக்கும். தன் வெட்டுண்ட தலையின் உருவமாகவே அரவான் வணங்கப்படுகிறார். அவர் தீராத நோய்களைக் குணப்படுத்துவதாகவும் குழந்தையில்லாத பெண்களுக்குக் குழந்தைப்பேறு அளிப்பதாகவும் நம்பப்படுகிறது.
அரவான் இந்தோனேசியாவிலும் அறியப்படுகிறார் (இங்கு அவரது பெயர் Irawan என்று எழுத்துக்கூட்டப்படுகிறது). சாவகப் பகுதியின் முக்கிய தீவுகளில் உள்ள அரவானுக்கென்று தனிப்பட்ட மரபுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இவற்றில் நாகருடன் அரவானுக்கு தொடர்பு இல்லை. மேலும் சில சாவக மரபுகளில் அரவானும் கிருஷ்ணரின் மகளாகிய திதிசரியும் திருமணம் செய்துகொள்வதாகவும், தவறாக அடையாளம் காணப்படுவதால் அரவானுக்கு மரணம் நேர்வதாகவும் கருதப்படுகிறது. இந்தக் கதைகள் சாவகத்தின் பாரம்பரிய நாடகக்கலைகளான வயாங் (குறிப்பாக வையாங்க் குளிட் என்ற நிழல்-பொம்மலாட்ட) முறையில் சொல்லப்படுகின்றன.


பெயர் வரலாறு மற்றும் பிற பெயர்கள்

மோனியர் வில்லியம்சின் சமற்கிருதம்-ஆங்கிலம் அகராதி (1899), இரவன் என்ற பெயர் இராவத் (इरावत्, Irāvat) என்ற வேர்ச்சொல்லிருந்து உருவானது என்று குறிப்பிடுகிறது. இராவத் என்ற சொல், இடா (इडा) என்ற வார்த்தையுடன் நெருங்கிய தொடர்புள்ள இரா (इरा) என்ற வார்த்தையிலிருந்து உருவானதாகும். இரா என்ற வார்த்தைக்கு "உணவைக் கொண்டிருத்தல்", "அதிகப்படியான பொருள்களைக் கொண்டிருத்தல்", அல்லது "வசதியாக இருத்தல்" (மகாபாரதம், ரிக் மற்றும் அதர்வ வேத சாத்திரங்களில் பயன்பாடு) என்று பொருள் கொள்ளப்படுகிறது.ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சமயத் துறை[5] பேராசிரியர் ஆல்ஃப் ஹில்டிபைட்டெல் (Alf Hiltebeitel) இரவன் அல்லது இரவந்த் என்ற சமசுகிருதப் பெயர் இடாவந்த் (இடா வைக் கொண்டிருக்கும் ஒருவன்) என்பதிலிருந்து உருவானதாகக் கூறுகிறார். இடா என்ற வார்த்தை, சமய ரீதியாக ஒரு தியாகத்தின் அனைத்து ஆக்கத்தன்மை நிறைந்த நன்மைகளும் (உண்பவர்களுக்குக்) கிடைக்கச் செய்யும் ஓர் உண்ணக்கூடிய பொருளைக் குறிக்கிறது என பிரெஞ்சு இந்தியவியலாளர் மடிலைன் பியார்டூ (Madeleine Biardeau) விளக்குகிறார். இந்த வரையறையின் அடிப்படையில், இரவன் என்றால் மகாபாரதத்தில் தியாகத்திற்குப் பலியாகும் ஒருவர் என்று பொருளென பியர்டூ கருதுகிறார். வேறு இடங்களில் தேவர்களும் அசுரர்களும் அடையப் போட்டியிடும் ஒரு பொருளாகவும் இடா குறிப்பிடப்படுகிறது.
இரவன் எனும் பெயர் அரவன் என்று பொதுவாக அறியப்படுகிறது. தென்னிந்தியாவில் அரவான் என்று வழங்கப்படுகிறது. தென்னிந்தியாவில் அரவான் இரண்டு வழிபாட்டு மரபுகளில் வணங்கப்படுகிறார், அவை: கூத்தாண்டவர் வழிபாட்டு மரபும் (அரவானுக்கு மட்டுமானது) திரௌபதி (அரவானின் மாற்றாந்தாய்-அருச்சுனனின் மனைவி) வழிபாட்டு மரபும். கூத்தாண்டவர் மரபில் அரவான் கூத்தாண்டவர் அல்லது கூத்தாண்டர் என்று அறியப்படுகிறார். கூத்தசுரன் என்ற அரக்கனைக் கூத்தாண்டவர் கொலை செய்வதாகக் கூறும் புராணக் கதையின் அடிப்படையில் இந்தப் பெயர் ஏற்பட்டது.
தமிழ்ப் பெயரான அரவான் அரவு (பாம்பு) என்ற வார்த்தையிலிருந்து உருவானதாகப் பரவலாக நம்பப்படுகிறது. அரவானுக்கும் பாம்புக்கும் உள்ள தொடர்பு அவரது உருவத்தோற்றத்தில் வெளிப்படுகிறது.

உருவ விளக்கம்

அரவான் வெட்டுண்ட தலையின் உருவமாகவே எப்போதும் கோவில்களில் வணங்கப்படுகிறார். வழக்கமாக மீசை, பெரிய கண்கள் மற்றும் காதுகள் ஆகியவற்றுடன் அரவான் சித்தரிக்கப்படுகிறார்; ஒரு கூம்பு வடிவ மகுடம், நெற்றியில் வைணவ நாமம் மற்றும் காதணிகளை அணிந்து காட்சியளிக்கிறார். மகுடத்தின் மீது நாகப்பாம்பு படமெடுப்பது போன்றோ, அல்லது அதிலிருந்து நாகப்பாம்பின் தலைகள் வருவது போன்றோ அல்லது அதன் பின்புறத்திலிருந்து ஒரு நாகப்பாம்பு வருவது போன்றோ அரவானின் உருவம் பொதுவாகச் சித்தரிக்கப்படுகிறது. கூவாகத்தில் இருக்கும் அரவான் சிலையின் மகுடத்திலும் பாம்பு உருவம் இடம்பெற்றுள்ளது.
பேய்களைச் சித்தரிக்கப் பயன்படுத்தப்படும் கோரைப் பற்கள் இருப்பது அரவான் உருவத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும். கூவாகத்தில் உள்ள அரவானின் உருவத்தில் இது போன்ற கோரைப் பற்கள் இல்லை எனினும், அரவானின் பேய் குணங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் திரௌபதி வழிபாட்டு மரபில் அவரது சிலைகளில் இந்த கோரைப் பற்கள் பெரும்பாலும் இடம்பெறுகின்றன.
அரவான் தலை சிலைகள் ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படுவதற்கு ஏற்றவாறு எளிதாகவும், வண்ணம் தீட்டப்பட்டோ அல்லது தீட்டப்படாமலோ இருக்கும். இச்சிலைகள் அரவான் கோவில்களில் ஒன்றாக வைக்கப்பட்டிருக்கும். கூவாகம், கொத்தடை, கொத்தட்டை மற்றும் பிள்ளையார்க்குப்பம் போன்ற இடங்களிலுள்ள அரவான் உருவங்கள் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட முகத்துடன் பலவண்ண ஆபணரங்களைக் கொண்டு சித்தரிக்கப்பட்டுள்ளன. கொத்தட்டை, மதுக்கரை மற்றும் பிள்ளையார்குப்பம் போன்ற இடங்களில் வண்ணம் தீட்டப்படாத கருப்பு நிற கல் சிற்பங்களைக் காணலாம்.
அரவானது தியாகத்தைச் சித்தரிக்கும் ஓவியங்களும் உள்ளன. இக்காட்சிகளில் பெரும்பாலும், அரவானின் தலை வெட்டப்படும் நேரத்தில் அவர் காளி தெய்வத்தினை வணங்கி நிற்பதைப் போன்று இருக்கும். தன் தலையைத் தானே வெட்டிக் கொண்ட அரவான், ஒரு கையில் வாளுடன் மற்றொரு கையில் வெட்டுண்ட தலையை ஏந்தி காளிக்கு அளிப்பது போன்ற ஓவியங்களும் உள்ளன. (இத்தகைய ஓவியமொன்று சென்னை, சௌக்கார்பேட்டையில் உள்ளது).

இலக்கியத்தில் அரவான்

மகாபாரத காப்பியத்தில், அதன் முக்கியக் கதாநாயகனான அருச்சுனரின் மகனாக ஒரு சிறிய கதாப்பாத்திரமாக அரவான் தோன்றுகிறார். மகாபாரதத்தின் பின்புலத்திலிருந்து, அதன் காலம் முந்தைய வேத காலத்திற்கு பிறகும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவில் முதல் பேரரசு உருவானதற்கு முன்பும் அமைந்த காலம் என அறியப்படுகிறது. எனவே அதன் காலம் கிமு எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். சிறிதும் மாறாமலிருந்த வேதங்களைப் போலன்றி, பிரபலமான மகாபாரதம் மொழியிலும் நடையிலும், கதை சொல்பவர்களால் மாற்றப்பட்டிருக்கவேண்டுமெனப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இத்தகைய மாறும் தன்மையுடைய காப்பியத்தின் மிகப் பழமையான பகுதிகள் இதைப் பற்றிய புற மேற்கோள்களை விடப் பழமையானதல்ல என நம்பப்படுகிறது. கிமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த பாணினியின் இலக்கணக் கையேடான அட்டாத்தியாயி இத்தகைய மேற்கோள் குறிப்பிடும் ஒரு நூலாகும். குப்தர்கள் காலத்தின் முற்பகுதியிலேயே (நான்காம் நூற்றாண்டில்) மகாபாரதம் இறுதி வடிவம் அடைந்தது என மதிப்பிடப்பட்டுள்ளது. மகாபாரதத்தின் முதல் இலக்கியத் திறனாய்வின் ஆசிரியர் பின் வருமாறு குறிப்பிடுகிறார்: ”மாறும் தன்மையுடைய நூலின் அசல் வடிவத்தை அதன் உண்மையான வகை மற்றும் கருத்தியல் கிளையமைப்பு (stemma codicum ) வடிவங்களைக் கொண்டு பெற நினைப்பது பயனற்றது. நமக்குக் கிடைக்கக்கூடிய கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டு அதன் மிகப் பழைய வடிவத்தைக் கண்டுபிடிப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.”


சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலில் உள்ள அரவானின் மரத்தால் ஆன தலை
அரவான் அருச்சுனன் மற்றும் உலுப்பியின் மகன் என இரு புராணங்களில் குறிப்பிடப்படுகிறார். அவையாவன 1) விஷ்ணு புராணம் (4:20:12). இதன் காலம் பிற்கால வேத காலத்திலிருந்து குப்தர் காலம் வரை இருக்கலாம் 2) பாகவத புராணம் (9:22:32). இது பொதுவாக வேதகாலத்தியது என கருதப்பட்டாலும், நவீன அறிஞர்கள் இதன் காலம் கிபி 9 அல்லது 10ஆம் நூற்றாண்டு எனக் கருதுகிறார்கள். மகாபாரதத்தின் சமசுகிருதப் பதிப்பில், 18 நாட்கள் நடந்த மகாபாரதப் போரின் போது அரவான் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டாலும், மகாபாரதத்தின் தமிழ் பதிப்புகள் போர் துவங்குவதற்கு முன்பே அவர் காளிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாகக் கூறுகின்றன. ஹில்டிபெய்டல் இதனைப் பெண் கடவுளுக்கு முன்னர் தன்னைத் தானே வெட்டிக் கொள்வதையும், தலையறுத்துக் கொள்வதையும் உயர்வாகக் கருதும் தென்னிந்திய மரபோடு தொடர்பு படுத்துகிறார்.[24][25] போரிடும் தமிழ் அரசர்கள் வெற்றி வேண்டி வெற்றி தேவியின் முன் தங்கள் குருதியைச் சிந்துவதைச் சித்தரிக்கும் தமிழ் சிற்பங்களைக் குறிப்பிட்டு அதே போல தேவி மகாத்மயம் என்ற புராணத்தின் இறுதியில் வரும் ஒரு காட்சியுடன் அவற்றை ஒப்பிடுகிறார்.(இத்தமிழ் சிற்பங்களில் காட்டப்படும் தெய்வம் கொற்றவை, துர்க்கையுடனும் காளியுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது)
ஹில்டிபெய்டல் தெலுங்கு மரபுக் கதைகளில் குறிப்பிடப்படும் பார்பரிக்காவின் தன் பலியினை அரவான் கதையுடன் ஒப்பிடுகிறார். பார்பரிக்கா மகாபாரதத்தில் வரும் மற்றொரு கதாபாத்திரம். அரவானைப் போலவே தன் கழுத்தைத் தானே வெட்டிக் கொண்டு தியாகம் செய்தவர் பார்பரிக்கா. தெலுங்கு மரபுக்கதைகளில் மட்டுமல்லாது இராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், கார்ஹ்வால், குருட்ச்சேத்திரம், புந்தேல்கண்ட் மற்றும் ஒரிசா ஆகிய பகுதிகளின் மரபுக் கதைகளிலும் பார்பரிக்கா இடம் பெறுகிறார். தலையை வெட்டித் தியாகம் செய்த பின்னும், வெட்டுண்ட தலையின் கண்கள் மூலம் மகாபாரதப் போர் முழுவதையும் காணும் வரம் பெறுவதே அரவானுக்கும் பார்பரிக்காவிற்கும் உள்ள கவனிக்கத்தக்க ஒற்றுமையாகும்.
தமிழ் இலக்கியத்தில் அரவானின் தியாகச் செயல் பற்றிய முதல் குறிப்பு பெருந்தேவனார் ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதிய பாரத வெண்பா என்ற நூலில் காணப்படுகிறது. இதுவே மகாபாரதத்தின் தமிழ்ப் பதிப்புகளுள் தற்போது கிடைப்பவனவற்றுள் மிகப் பழமையானது. பதினான்காம் நூற்றாண்டில் வில்லிபுத்தூராழ்வார் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் நல்லபிள்ளை ஆகியோர் எழுதிய மகாபாரதங்களிலும் அரவான் பற்றிய கதை குறிப்பிடப்பட்டுள்ளது.கூத்தாண்டவர் கோவிலைப் பற்றிய கூத்தாண்வர் தல புராணம் என்ற நூலிலும் அரவான் கதை குறிப்பிடப்பட்டுள்ளது.
அரவான் மரபு பற்றிய விவரங்களைக் கூத்து என்னும் தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலையின் மூலம் அறிந்து கொள்ளலாம். மரபுவழி தெருக்கூத்தில் ”அரவான் களப்பலி” பிரபலமான ஒரு கருப்பொருளாக உள்ளது. மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகப் போர் நடக்கும் முன்பு காளிக்கு அரவான் தன்னையே பலி கொடுத்த கதையை அரவான் களப்பலி கூறுகிறது. மெலட்டூர், கொடுகிழி மற்றும் ஏர்வாடி போன்ற சிற்றூர்களில் ஆண்டுதோறும் அரவான் களப்பலி பல்வேறு கூத்து வடிவங்களில் அரங்கேற்றப்படுகிறது. கரம்பையில், ஆண்டுத் திருவிழாவின் (ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெறும்) 18 ஆம் நாளன்று திரௌபதி வழிபாட்டின் ஒரு பகுதியாக அரவான் களப்பலி நிகழ்த்தப்படுகிறது.
தற்காலப் புரிதல்களில் அரவானின் தலை, தியாகத்தை மற்றுமல்லாமல் மீட்டுருவாக்கம் மற்றும் தொடர்ச்சி ஆகிய கருப்பொருள்களையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. தலை வெட்டப்பட்ட பின்னரும் அத்தலையினால் மகாபாரதப் போர் முழுவதையும் அரவானால் காணமுடிவதே இத்தகு புரிதலுக்கு அடிப்படை. எடுத்துக்காட்டாக, ராமசாமிப்புலவரின் "மேற்கோள்விளக்கக் கதை அகரவரிசை" (1963) என்ற புத்தகத்தில் தன்னைத் தானே தியாகம் செய்து கொண்டதற்கு எடுத்துக்காட்டாக இருப்பதால் தமிழ் நாட்டில் ஒரு நாட்டுப்புற நாயகனாக அரவான் இன்றும் கருதப்படுவதாக கூறப்படுகிறது. அரவான் கதாபாத்திரம் போருக்குச் சமூகம் கொடுக்கும் விலையையும் உணர்த்துகிறது. "என்றும் திருப்தியடையாத போர்க் கடவுள் புசிப்பதற்காகப்" பல தாய்மார்கள் தயக்கத்துடன் போருக்கு அனுப்பி வைத்த எண்ணற்ற அப்பாவிகளை அரவான் நினைவுபடுத்துகிறார். இந்தியவியலாளர் டேவிட் ஷுல்மேன், அரவானின் பலி தமிழ் காப்பிய மரபுகளில் வரும் பாம்புப் பலியின் இன்னொரு வடிவம் என்று கூறுகிறார்.


மகாபாரதம்

மகாபாரதத்தின் முதல் புத்தகமான ”ஆதி பர்வ”த்தில் (தொடக்கங்களின் புத்தகம்) அரவானின் பெற்றோர்களுக்குத் திருமணம் நடந்ததாக குறிப்பிட்டப்பட்டுள்ளது. அரவானின் பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய விவரங்கள் மகாபாரதத்தின் ஆறாவது புத்தகமான “பீஷ்ம பர்வ”த்தில் (பீஷ்மர் பற்றிய புத்தகம்) இடம் பெற்றுள்ளன. மகாபாரதத்தின் ஆறாவது புத்தகத்தில், பாண்டவர்களில் மூன்றாவது சகோதரனான அருச்சுனன், திரௌபதி-பாண்டவர்களின் திருமண விதிமுறைகளை மீறியதால் இந்திரபிரஸ்த (பாண்டவp பேரரசின் தலைநகரம்) நகரத்திலிருந்து ஓராண்டு புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டு நாடுகடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. அருச்சுனன் வடகிழக்கு இந்தியாவிற்குச் சென்று, அங்கிருந்த நாக வம்சத்தின் விதவை இளவரசி உலுப்பி என்ற பெண்ணின் மீது காதல் கொள்கிறார். அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்; அவர்களுக்கு அரவான் என்ற மகன் பிறந்தார். நாகர்களின் இருப்பிடமான நாகலோகத்தில் அரவானையும் உலுப்பியையும் விட்டுவிட்டு அருச்சுனன் தனது யாத்திரையைத் தொடர்ந்தார். அரவான் ”பரச்சேத்திரத்தில்” (வேறொருவருக்குச் சொந்தமான பகுதி) பிறந்ததாகக் கூறப்படுகிறது. பரச்சேத்திரத்தில் பிறத்தல் என்பது மற்றொருவரின் மனைவிக்கு பிறத்தலைக் குறிக்கிறதென ஹில்டிபைடெல் கருதுகிறார். தனது தாயின் பாதுகாப்பில் நாகலோகத்தில் அரவான் வளர்ந்தார். அருச்சுனன் மீது அரவானின் தாய்வழி மாமனுக்கு இருந்த வெறுப்பு காரணமாக அவர் அரவானை ஏற்றுக்கொள்ளவில்லை. அரவான் வளர்ந்த பிறகு, தனது தந்தையுடன் சேர்ந்து வாழும் எண்ணத்துடன் இந்திரனின் (அருச்சுனனின் தந்தை) இருப்பிடமான இந்திரலோகத்திற்கு சென்றார். தனது வளர்ந்த மகனைக் கண்ட அருச்சுனன் குருசேத்திரப் போரில் தனக்கு உதவியாக இருக்கும்படி வேண்டினார்.
இவ்வாறாகப் பாண்டவர்களின் எதிரிகளான கௌரவர்களுக்கு எதிராக, அரவான் தனது தந்தை மற்றும் பாண்டவர்களுக்கு உதவ குருசேத்திரப் போர்க்களத்தை வந்தடைகிறார். போரின் முதல் நாளில், அரவான் சுருதாயுசூ என்பவனுடன் சண்டையிட்டார். சுருதாயுசூ முற்பிறவியில் குரோதவாசா என்ற அரக்கனாக இருந்த சத்திரிய அரசனாவார். பின்னர் அவர் அர்ச்சுனனால் கொல்லப்பட்டார். போரின் ஏழாம் நாளன்று அவந்தி இளவரசர்களான விந்தா மற்று அனுவிந்தா ஆகியோரை அரவான் தோற்கடித்தார். பின்னர் இவர்களும் அர்ச்சுனனால் கொல்லப்பட்டனர்.
போரின் எட்டாம் நாளில், காந்தார தேசத்தின் இளவரசர்களுடன் அரவான் போரிட்டார். அவர்கள் சுவாலா அரசனின் மகன்களும் கௌரவர்களின் தாய்வழி மாமனான சகுனியின் இளைய சகோதரர்களுமாவர். கயா, கவாக்சா, விர்சவா, சர்மாவாத், அர்சவா மற்றும் சுகா ஆகிய சகோதரர்கள், கௌரவர்களின் ஒட்டுமொத்த படைவீரர் துணையுடன் அரவானைத் தாக்கினர். ஆனால் அரவானின் நாகர் படை இவர்களில் ஒருவரைத் தவிர மீதமிருந்த அனைவரையும் கொன்றது. எதிரிகளை வதைப்பவன் என்று போற்றப்படும், மாய வித்தையில் கைதேர்ந்தவரான அரவான், வாள் சண்டையில் ஐந்து காந்தார இளவரசர்களைக் கொன்றார், விர்சவா மட்டும் தப்பிவிட்டார்.
இதற்குப் பழிவாங்கும் விதமாக கௌரவர்களின் மூத்த சகோதரன் துரியோதனன், ரிஷ்யசிரிங்கரின் மகனாகிய அரக்கன் அலம்பூசனிடம் அரவானைக் கொன்றுவிடும்படி ஆணையிட்டார். இந்த முறை அரவானைப் போன்று அலும்பூசனும் போரில் மாயக் கலையைப் பயன்படுத்தினார். தன்னிடமிருந்த வில்லைக் கொண்டு அலம்பூசன் அரவானைத் தாக்கினார்; ஆனால் எதிர்த்துத் தாக்கிய அரவான், அலம்பூசனின் வில்லை உடைத்தெறிந்து அவனைப் பல துண்டுகளாக வெட்டியெறிந்தார். அப்போதும் அலம்பூசனின் உடல் மீண்டும் தானாக ஒன்றிணைந்தது. பின்னர் அரவான் சேசா (அனந்தா) எனும் பாம்பு வடிவத்தை அடைகிறார், அப்போது அவரது பாம்புப் படை அவரைச் சுற்றி வளைத்து அவரைப் பாதுகாக்கிறது. அப்போது அலம்பூசன் பாம்புகளுக்குப் பகைவனான கருட வடிவத்திற்கு மாறி, பாம்புப் படையைத் தாக்கி அழித்து அரவானின் தலையைக் கொய்து கொல்கிறார். பின்னர் அரவானின் தந்தை வழி சகோதரனான கடோத்கசன் அலம்பூசனைக் கொன்று பழி தீர்க்கிறார்.

பலிக்காகத் தேர்ந்தெடுத்தல்

அரவான் பற்றிய தமிழ் மரபுகளைப் பற்றிய முதல் குறிப்புகள், பெருந்தேவனார் எழுதிய மகாபாரதத் தமிழ்ப் பதிப்பான பாரத வெண்பாவில் (ஒன்பதாம் நூற்றாண்டு) காணப்படுகின்றன. களப்பலி என்ற சடங்கைப் பற்றிச் சொல்வது இந்த நூலின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். மகாபாரதத்தின் தமிழ்ப் பதிப்புகளில் மட்டுமே களப்பலி பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. இது போரில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகப் போர் தொடங்குவதற்கு முன்பே செய்யப்படும் சடங்கு. மகாபாரதப் போர் துவங்குவதற்கு முன்பு கௌரவர்களின் தலைவனும் பாண்டவர்களின் எதிரியுமான துரியோதனன், பாண்டவர்களின் சோதிட வல்லுநரான சகாதேவன் மூலமாக அமாவாசை தினமே (சோதிடம் பார்த்த நாளுக்கு அடுத்த நாள்) களப்பலி செய்வதற்கு உகந்த நாள் என்பதை அறிந்து கொள்கிறார் என்று பெருந்தேவனார் விளக்குகிறார். இதனால் துரியோதனன் அரவானிடம் பேசி அவரைக் களப்பலி கொடுக்கச் சம்மதம் பெறுகிறார்.


காளியின் உருவச்சிலை
பாண்டவர்களின் நெருங்கிய நண்பரும் ஆலோசகருமான கிருஷ்ணர், துரியோதனனின் திட்டத்தை அறிந்து கொண்டு, அரவான் கௌரவர்களுக்காகத் தியாகம் செய்யாமல் பாண்டவர்களுக்காகத் தன்னைத் தியாகம் செய்யும் வண்ணம் ஒரு திட்டம் தீட்டுகிறார். பாண்டவர்களில் மூத்தவரான தருமனிடம் இதைப் பற்றி ஆலோசித்து, காளி தெய்வத்திற்குப் பலி கொடுப்பதை ஆயுதபூசையின் ஒரு பகுதியாக நிறைவேற்றலாம் எனப் பரிந்துரைக்கிறார். இவ்வாறு பலி கொடுக்கச்செய்வதற்குத் தன்னையும் சேர்த்து நான்கு பேர் பொருத்தமானவர்கள் என்று கிருஷணர் கருதுகிறார். மற்ற மூவர்: கௌரவர்களின் பக்கமுள்ள சால்யன், பாண்டவர்களின் படைத்தலைவர் அருச்சுனன் மற்றும் அரவான். இந்த நான்கு பேரிலிருந்து அரவான் தான் சரியான தேர்வாக இருக்குமென்று கிருஷ்ணர் முடிவு செய்கிறார். அரவான், கிருஷ்ணரின் உத்தரவை ஏற்று பாண்டவர்களுக்காகக் களப்பலியாகச் சம்மதிக்கிறார். துரியோதனனிடம் கெளரவர்களுக்காகக் களப்பலியாவதாக முன்பே வாக்களித்திருந்ததையும் கூறுகிறார்.
பின்னாளில் வந்த தமிழ் நூல்கள் பெருந்தேவனாரின் பதிப்பிலிருந்து மாறுபடுகின்றன. வில்லிப்புத்தூராழ்வாரின் பதினான்காம் நூற்றாண்டு பதிப்பில், கிருஷ்ணர் முதலில் தானே களப்பலியாக முன்வருவதாகவும், அரவான் தானாக முன்வந்து அவருக்குப் பதிலாகத் தான் களப்பலியாகச் சம்மதிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நூலில் துரியோதனன் பற்றிய செய்தி ஏதுமில்லை. கௌரவர்கள் ஒரு வெள்ளை யானையைப் பலி கொடுத்ததை ஈடு செய்ய அரவானைப் பலியிடுவதாக பிற கதைகள் கூறுகின்றன.தஞ்சாவூர் மாவட்டத்தின் நெப்பத்தூர் என்ற கிராமத்திலுள்ள மரபுகள் படி அரவான் மிக வலிமையானவர் என்றும் ஒரே நொடியில் துரியோதனனின் படைகளை அழித்துப் போரே ஏற்படாமல் தடுத்திருந்திருக்கக்கூடிய சக்தியுள்ளவராகவும் நம்பப்படுகிறது. அதனால், கிருஷ்ணர் பெரும்பலியான போர் நிகழ வேண்டும் என்பதற்காக அரவானைப் பலி கொடுப்பதே சிறந்தது எனப் பரிந்துரைக்கிறார்.
தெருக்கூத்து நாடகங்களில், அரவானின் தியாகச் செயலானது தங்கள் தந்தையர்களுக்காக தமது பாலுறவு இன்பத்தையும் இளமையையும் விட்டுக்கொடுத்த யயாதியின் மகன் புரு மற்றும் சாந்தனுவின் மகன் பீஷ்மர் ஆகியோருடன் ஒப்பிடப்படுகிறது. இந்த நாடகங்களில், அரவானின் சம்மதம் கிடைத்த பிறகு கிருஷ்ணர் அரவானின் தாயான நாகக்கன்னி உலுப்பியின் அனுமதியைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. முதலில் அரவானின் முடிவை அவனது தாய் கடுமையாக எதிர்க்கிறார். ஆனால் கடைசியில் தான் காளிக்கு அர்ப்பணிக்கப்படவே பிறந்தவன் என்று அரவான் எடுத்துக்கூறிய பின்னர் அரவானின் தாய் ஒப்புக்கொள்கிறார்.
இந்தக் கதையின் அனைத்து வடிவங்களிலும், இறுதியில் கிருஷ்ணர் சூரிய தேவனையும் சந்திர தேவனையும் கட்டுப்படுத்தி அவர்களின் நகர்வை மாற்றியமைத்து அன்றைய நாளுக்கு ஒரு நாள் முன்னரே அமாவாசை தினம் வரும் வண்ணம் செய்வதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் தனது உடலின் முதல் பலியைப் பாண்டவர்களுக்காக அரவானால் செய்ய இயலுகிறது. துரியோதனனுக்குச் செய்து கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற மறுநாள் கெளரவர்களுக்காக எஞ்சியிருக்கும் உடலைப் பலி கொடுக்கிறார். இவ்வாறு செய்ததன் மூலம் துரியோதனனுக்குத் தான் செய்து கொடுத்த வாக்குறுதியையும் அரவான் காப்பாற்றினார்.


மூன்று வரங்கள்


பாரத வெண்பாவில், அரவான் கிருஷ்ணரிடம் தான் போர்க்களத்தில் ஒரு சிறந்த வீரனால் வீர மரணம் அடைய வேண்டும் என்ற வரத்தை வேண்டியதாகக் கூறப்படுகிறது. பாரத வெண்பாவில் அரவான் ஒரே ஒரு வரம் மட்டும் கேட்டதாகக் கூறப்பட்டிருப்பினும், பொதுவாகத் தமிழ் மரபுகளில் அரவான் மூன்று வரங்களைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. பாரத வெண்பாவில் அரவான் ஒரு வரம் மட்டுமே வாங்கியதாகக் கூறப்படுவது, போருக்கு முன்பு அரவான் தன்னைத் தியாகம் செய்து கொண்டதாகத் தமிழ் மரபுகளில் கூறப்படுவதையும், மகாபாரதத்தின் முந்தைய சமசுகிருத பதிப்பில் அரவான் போரிட்டு மடிவதாகச் சொல்லப்படுவதையும் பொருந்திப் பார்க்க 9ஆம் நூற்றாண்டில் நடந்த முயற்சியைக் குறிக்கிறது என ஹில்டிபைடெல் கருதுகிறார்.
கூத்தாண்டவர் மற்றும் திரௌபதி ஆகிய இரு மரபுகளிலும், அரவான் 18 நாள் போர் முழுவதையும் காண வேண்டும் என்ற இரண்டாவது வரத்தையும் பெற்றதாக நம்பப்படுகிறது. வில்லிப்புத்தூராழ்வாரின் 14ஆம் நூற்றாண்டு மகாபாரதப் பதிப்பில் இரண்டாவது வரம் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. இந்தப் பதிப்பில், அரவான் போரில் எதிரிகள் பலரைக் கொன்று வீர மரணம் அடைந்த பின்னர் சில நாட்கள் மட்டும் போரைப் பார்ப்பதற்கான வரத்தைப் பெறுவதாக உள்ளது. ஆனால் போரின் எட்டாம் நாளில் அரவான் இறந்த பிறகு வெட்டுண்ட தலையுடன் போர் முழுவதையும் கண்டானா என்பது பற்றிய தகவல்களை வில்லிப்புத்தூராழ்வார் குறிப்பிடவில்லை.

பேளூர் கோவிலில் மோகினி சிலை. நாட்டார் மரபுகளில் கிருஷ்ணர் மோகினி வடிவம் கொண்டு அரவானை மணந்தார் என நம்பப்படுகிறது.
மூன்றாவது வரம் பற்றிய தகவல்கள் நாட்டுப்புற சடங்குகளில் மட்டுமே காணப்படுகின்றன. தன்னைப் பலி கொடுக்குமுன் திருமணம் செய்து கொள்ளவேண்டும் எனும் மூன்றாம் வரத்தைப் பெறுவதன் மூலம் அரவான் தன் உடலைத்தகனம் செய்து ஈமச்சடங்குகள் நடக்க வழிவகை செய்கிறார். (மணம் புரியாதவர்கள் புதைக்கப்படுவர்). ஆனால் அரவானைத் திருமணம் செய்து கொண்டால் விதவையாவது நிச்சயம் என்பதால் அரவானை எந்தப் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. இந்த சிக்கலைத் தீர்க்க கிருஷ்ணர் மோகினி என்ற பெண் வடிவம் ஏற்று அரவானைத் திருமணம் செய்து கொண்டு ஓர் இரவு அரவானுடன் இருந்ததாக கூத்தாண்டவர் மரபில் கூறப்படுகிறது. அரவான் தன்னையே பலி கொடுத்த அடுத்த நாள் கிருஷ்ணர் மோகினியின் வடிவில் விதவைக் கோலம் பூண்டு புலம்பியதாகவும், அதன் பிறகு மீண்டும் பழைய ஆண் வடிவத்திற்கு மாறி போரில் ஈடுபட்டதாகவும் இம்மரபில் கூறப்படுகிறது.தெருக்கூத்து கதைகளில் சிறப்பான முறையில் திருமணச் சடங்குகள் நடைபெறுவது போலவும் அதனையடுத்து மோகினி திடீரென்று பிரிந்து செல்வது போலவும் காண்பிக்கப்படுகின்றன. இது இத்திருமணம் உடலுறவில் முடியவில்லை என்பதைக் குறிக்கிறது. திருநங்கைகளிடையே பிரபலமான மற்றொரு கதை வடிவில் அரவான் தாம்பத்திய இன்பத்தைப் பெற வேண்டியே திருமண வரம் பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் திருமணத்துக்கு பின் அரவான் மோகினியுடன் உடலுறவு கொள்வது தெளிவாகச் சொல்லப்படுகிறது. திருமணம் பற்றிய இந்த மூன்றாவது வரம் குறித்து அனைத்து நாட்டுப்புற மரபுகளிலும் ஒரே மாதிரியான செய்திகள் இல்லை. வேறு சில மரபுகளில் கிருஷ்ணர் போருக்கு முன்பு வேறு சில திருமணங்களை ஏற்பாடு செய்வதாகக் கூறப்படுகிறது. தஞ்சாவூர் மரபுகளில் அரவானுக்கும் மோகினிக்கும் திருமணம் நடப்பதில்லை. மாறாக அரவான், கிருஷ்ணரின் இளைய ஒன்றுவிட்ட சகோதரன் சாத்யகியின் மகள் பரவநாச்சியாளை திருமணம் செய்து கொள்வதாகக் கூறப்படுகிறது.
முதல் வரமும் (வீர மரணம்) மூன்றாவது வரமும் (திருமணம்) கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில் உருவானவை என்றும் இரண்டாவது வரம் திரௌபதி வழிபாட்டு மரபில் உருவானது என்று ஹில்டிபைடெல் கூறுகிறார். கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில், வீர மரணம் மற்றும் திருமண நிகழ்வு ஆகிய இரண்டு சடங்குகளும் இடம்பெறுகின்றன. இச்சடங்குகளை திருநங்கைகள் நிகழ்த்துகின்றனர். ஆனால் திரௌபதி வழிபாட்டு மரவில், கம்பத்தில் பொருத்திய களிமண்ணால் செய்யப்பட்ட அரவானின் தலை, 18 நாள் நடைபெறும் போர் நிகழ்வுகளைப் பார்ப்பதைக் குறிக்கும் சடங்கே முக்கிய நிகழ்வாக நிகழ்த்தப்படுகிறது. மேலும், தஞ்சாவூர் பகுதியில் உள்ள திரௌபதி வழிபாட்டு மரபின் நூல்களில் இந்த வரம் மட்டுமே இடம்பெறுகிறது; மற்ற இரு வரங்கள் காணப்படவில்லை.
போருக்கு முன்பு அரவானைப் பலி கொடுப்பது முதல், இரண்டாவது வரங்களுக்கு முரணாக உள்ளது. ஆனால் இந்த மரபுகளில் இம்முரணுக்குத் தனிப்பட்ட விளக்கங்கள் உள்ளன. போருக்கு முன்பு தன்னைத்தானே பலி கொடுப்பது போரின் போது வீர மரணம் அடைதல் என்ற நிகழ்வுக்கு முரணாக உள்ளது. மேலும் இவை இரண்டுமே உயிருடன் இருந்து போர் நிகழ்வுகள் முழுவதையும் காணுதல் என்பதற்கு முரணாக உள்ளன. கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில், அரவானின் பலிக்கு பிறகு அவரது உடல் மீண்டும் தானாகவே ஒன்றிணைந்து முழுமையானதாகவும், இதனால் போரின் எட்டாம் நாள் அரவான் வீர மரணம் அடைய முடிந்ததாகவும் விளக்கமளிக்கப்படுகிறது. போரின் அனைத்து நிகழ்வுகளையும் அரவான் தொடர்ந்து கவனித்தார் என்ற இரண்டாவது வரம் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில் பெரிதாகக் கருதப்படுவதில்லை. மற்றொரு புறம், திரௌபதி வழிபாட்டு மரபில் முதல் வரமான வீர மரணம் பெரிதாகக் கருதப்படவில்லை. மேலும் அரவான் தனது வெட்டுண்ட தலையில் உள்ள கண்கள் மூலம் போரின் நிகழ்வுகளை தொடர்ந்து பார்க்க முடியும் எனக் கூறுவதன் மூலம், அரவான் தொடர்ந்து போரைப் பார்த்தது குறித்த இரண்டாவது வரம் பற்றிய குழப்பத்தை இந்த மரபு தீர்க்கிறது. மூன்றாம் கண்ணோட்டம் ஒன்று, அரவான் தன்னைத் தானே தியாகம் செய்து கொண்ட பிறகு அரவானின் உடல் மீண்டும் ஒன்றிணைந்து முழுமையடைந்ததாகவும், எட்டாம் நாள் அவர் தலை துண்டிக்கப்படும் வரை வீரத்துடன் சண்டையிட்டதாகவும், தனது வெட்டுண்ட தலையிலிருந்த கண்களின் மூலம் போரின் எஞ்சிய நாட்களைக் கண்டார் என்றும் கூறி, இந்த மூன்று வரங்களையும் பொருத்தி விளக்குகிறது.
தமிழ் மரபுகளில் அரவானின் போருக்கு முந்தைய பலி பொதுவான ஒன்றாக உள்ளது. அரவான் கேட்ட வரங்கள் கிடைக்கப்பெற்றதும் பலிக்குத் தயாராகிறார். பின்னர் குருட்சேத்திர போர்க்களத்திற்குச் செல்கிறார். தருமன் தனது ஆயுதக் கூடத்தில் காளியை வணங்கிய போது அரவான் தனது அணிகலன்களையும் மார்புக் கவசத்தையும் நீக்கிவிட்டு வணங்கினார். அடுத்து அவர் தனது உடலை 32 துண்டுகளாக வெட்டினார். (அவரது உடலின் 32 கச்சித அம்சங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு துண்டு என்ற கணக்கில்) பின்னர் அவற்றை தருமன் காளி தேவிக்குப் படைத்தார். தெருக்கூத்தில் அரவானாக நடிக்கும் நடிகர் கழுத்திலிருந்து கீழ்நோக்கி ஒரு வெள்ளைத் துணியைக் கட்டிக்கொண்டு இந்தக் காட்சிகளை நடித்துக்காட்டுவார். இந்தக் காட்சியில் நடிக்கும் நேரத்தில் அரவானின் ஆன்மா நடிகரின் உடலில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. தெருக்கூத்து நடைபெறும் மேடையில் இப்பலியைக் குறிக்கும் வகையில் சிலநேரங்களில் கோழி பலியிடப்படும். வில்லிப்புத்தூராழ்வாரின் மகாபாரதத்தில் அரவானின் தன்பலியை முழுமையாக்க காளிக்கு யானை ஒன்று பலிகொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
அரவான் தனது சதைகளை வெட்டியெடுத்து, அவரது தலையும் எலும்புக்கூடும் மட்டுமே மிஞ்சியிருக்கும் தருணத்தில். கிருஷ்ணர், அரவானின் தாத்தாவும் உலுப்பியின் தந்தையுமான ஆதிசேஷனை வணங்குமாறு அரவானுக்கு அறிவுறுத்துகிறார். அப்போது ஆதிசேஷன் அரவானின் உடலைச் சுற்றிக்கொண்டு அவனது சதையாக மாறுகிறார், இதனால் அவனது உடல் மீண்டும் வடிவம் பெறுகிறது.[60] கிருஷ்ணர் இரண்டாவது வரத்தை நிறைவேற்ற, பலம் வாய்ந்த அரவானைத் தோற்கடிக்கும் வகையில் எதிரிப் படையிலிருக்கும் ஒருவனை மிகவும் வலிமையானவனாக மாற்றுகிறார். இதன் மூலம் அரவானுக்கு வீர மரணம் அளிக்கப்படுகிறது. இதற்கு கிருஷ்ணர் அலம்பூசனைத் தேர்வு செய்தார். பிறகு அசரீரி மூலமாக அலம்பூசனை கருட வடிவம் எடுக்க யோசனை கூறுகிறார் அல்லது அலம்பூசனுக்கு உதவ உண்மையான கருடனை அனுப்புகிறார் எனக் கூறப்படுகிறது. ஆதிசேஷன், தனது எதிரியான கருடனைக் கண்டதும் பயத்தின் காரணமாக அரவானிடமிருந்து விலகிச் செல்ல, பாதுகாப்பற்ற நிலையில் சோர்வாக இருந்த அரவானை அலம்பூசன் தலையைக் கொய்து கொல்கிறார்.


அரவானிலிருந்து கூத்தாண்டவர்

கூவாகம் பகுதியில் கூறப்படும் ஒரு மரபுக் கதையில், அரவான் எப்படி கூத்தாண்டர் என அழைக்கப்படலானார் என விவரிக்கப்படுகிறது. போருக்குப் பிறகு, கௌரவர்களை அழித்தது குறித்து பாண்டவர்கள் பெருமை பேசிக் கொண்டிருக்கும் போது கிருஷ்ணர் இந்த போர் முழுவதையும் நேரில் பார்த்தவரான அரவானிடம் "இந்த போரில் பாண்டவர்கள் வெற்றியடைய உண்மையான காரணம் யார்"? என்று கேட்கிறார். எதிர்களின் தலையைக் கொய்யும் கிருஷ்ணரின் சக்கரம் மற்றும் அவர்களின் குருதியைச் சேகரிக்கும் சங்கு ஆகிய இந்த இரண்டையும் தான் கண்டதாக அரவான் பதிலளித்தார். வெற்றிக்கு முழுக்காரணம் கிருஷ்ணர் என உணர்த்துவதாகவே இந்தப் பதில் கொள்ளப்படுகிறது. செருக்கும் எளிதில் கோபம் கொள்ளும் குணமும் கொண்டவருமான பீமனுக்கு அரவானின் இந்த பதில் கடும் கோபத்தை உண்டாக்கியது. (போரை வெல்லுவதில் பீமன் ஆற்றிய பெரும் பங்கு மகாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ளது). பீமன் அரவானைத் தாக்குவதற்கு முன்பு, அரவானது தலையை கரபரிகா ஆற்றில் வீசுமாறு கிருஷ்ணர் ஆணையிட்டார். ஆற்றில் விழுந்து குழந்தை வடிவம் பெறுகின்ற அரவானை ஆற்றங்கரையோரத்தில் இருந்த சந்திரகிரி நகரின் அரசன் கண்டெடுக்கிறார். அரசன் குழந்தையைத் தூக்கும் போது "குவா குவா" என்று குழந்தை அழுததால் அந்த இடத்துக்கு கூவாகம் என்றும் அந்தக் குழந்தைக்கு கரபாலன் ("நாணல்-குழந்தை") என்றும் பெயரிட்டார்.
காரபாலன் வளர்ந்த பின்னர், ஒரு போரில் தனது வளர்ப்புத் தந்தையைக் காயப்படுத்திய கூத்தசூரன் என்ற அரக்கனைக் கொல்வதாக இக்கதையில் கூறப்படுகிறது. இந்த மரபின் மகாதேவியாக வணங்கப்படும் திரௌபதி அம்மன், கரபாலனுக்கு கூத்தாண்டவர் (கூத்தசூரனை கொன்றவன்) என்ற புதிய பெயரை வழங்கி ஆசீர்வதித்து கூவாகத்தில் அவருக்கு கோவில் ஒன்றையும் அருளுகிறாள். இந்த மரபிற்குள்ளேயும் பல வேறுபாடுகள் உள்ளன. இதன் சில கதை வடிவங்களில், குழந்தையைச் சந்திரகிரியின் அரசியான கிருபான்ஞ்சி என்பவர் கண்டெடுத்தாகக் கூறப்படுகிறது.பிற கதை வடிவங்களில் சந்திரகிரியின் அரசன் மற்றும் கூவாகம் கோவில் பற்றி எதுவும் கூறப்படவில்லை. மாறாக, இவை அரக்கன் கூத்தசூரனைப் பற்றி அதிகம் கூறுகின்றன. மேலும் தலையை மட்டும் கொண்டிருக்கும், நீரில் பிறந்த ஒருவனால் மட்டுமே அவனைக் கொல்ல முடியும் என்ற வரம் பெற்றதைப் பற்றியும் கூறுகின்றன. கிருஷ்ண அவதாரம் எடுத்த விஷ்ணு, இந்த அரக்கனை அரவான் கொல்வார் என்று கடவுள்களுக்குக் கூறுகிறார். இதை மனதில் கொண்டே அரவானின் தலை ஆற்றில் தூக்கி எறிய ஆணையிடுகிறார். பின்னர் அது கூத்தன் ("நீரில் பிறந்தவன்") என்ற குழந்தையாக மாறி அரக்கனைக் கொல்கிறது.



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.