தமிழர் தோற்றம் பற்றி இரு கருதுகோள்கள் உண்டு. பழந்தமிழர் தென் இந்தியாவின் ஆதிக்குடிகள் என்பது ஒரு கருதுகோள். தமிழர் மத்திய ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். எப்படி இருப்பினும் தமிழர் இனம் தொன்மையான மக்கள் இனங்களில் ஒன்று.
தமிழர்களின் தோற்றம் மற்ற திராவிடர்களைப் போலவே இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் அவர்கள் கி. மு. 6000-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று தொல்லியல் மற்றும் மரபியல் ஆய்வுகள் கருதுகின்றன. (கேட்கில் 1997). பண்டைய ஈரானின் இலாமைட் மக்களுடன் தமிழர்கள் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்டாலும் அதனை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை. சிந்து சமவெளி நாகரிக மக்கள் தமிழர்களோ அல்லது திராவிடர்களோ தான் (உதா. பர்போலா 1974; 2003) என்னும் கருத்தும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் குறிப்பாக ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கி. மு. 1000-ஆம் ஆண்டு காலத்து புதைக்கப்பட்ட மண்பாண்டங்கள் தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்குச் சான்றாக விளங்குகின்றன. அப் புதைபொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இவ்விடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் குறைந்தது கி. மு. 500 ஆண்டைச் சேர்ந்தவையாகும்.
தலைச்சங்கம்:
(முதற்சங்கம்) (கி.மு 7000) ஆண்டளவில் நடந்ததெனக் கருத இடம் தருமாறு இறையனார் அகப்பொருள் உரையில் சில கருத்துகள் உள்ளன. தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்தது அங்கு விரிசடைக் கடவுள் தலைச்சங்கத்திற்குத் தலைவனாகவிருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 4440 ஆண்டுகள் இச்சங்கம் நிலைத்திருந்ததாகவும், 4449 புலவர்கள் இருந்து தமிழாய்ந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. அகத்தியர் எழுதிய அகத்தியம் தலைச்சங்கத்தில் அரங்கேறியது என்பது பொதுவாக நிலவும் கருத்து.
தென்மதுரையில் பாண்டியர்களின் ஆட்சி நிலவியிருந்தது அங்கு 89 அரசர்கள் தென்குமரியை ஆண்டார்கள்.
இடைச்சங்கம்:
(கிமு 2387 - கிமு 306) ஏறைக்குறைய 2000 ஆண்டுகள் சிறப்புற்று இருந்த தமிழ்ச் சங்கம் என்று மரபு வழித் தமிழர் வரலாறு கூறுகிறது. இது கபடாபுரத்தில் இருந்தது. இது மூன்றாம் கடல்கோளால் அழிந்தது.
கடைச்சங்க காலம்:
கடைச்சங்க காலம் என்பது கி.மு. 300 முதல் கி.பி. 300 ஆண்டு வரை என்று கூறப்படுகிறது. சங்க காலம் எனப் பொதுவாகவும் அழைக்கப் படுகிறது. "கடைச்சங்கம் மதுரையில் நடந்தது; கடைச்சங்க கால மன்னர்கள் 49 பேர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்; மேலும் 449 புலவர்கள் இங்கு பங்களித்தனர்; 1850 ஆண்டுகள் கடைச்சங்க காலத்து அரசர்கள் 49 பேரும் ஆட்சி புரிந்தனர்" எனச் சிலம்பின் உரைப்பாயிரம் கூறுகின்றது.
சங்க காலம் என்று தமிழில் வழங்கப்படும் கூட்டுச் சொல்லில் உள்ள சங்கம் என்பது சமசுக்கிருத மொழியிலிருந்து வந்த சொல் என்பதால் சங்க காலம் என்று சொல்லுவதற்குப் பதில் கழகக் காலம் என்று சொல்லும் வழக்கும் உருவானது.
பாண்டியர்கள்:
பாண்டியர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு மூவேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, திருநெல்வேலி, மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர்.
சேரர்:
பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.
முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.
சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன
சோழர்:
பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. 'சோழ நாடு சோறுடைத்து என்பது பழமொழி'. எனவே சோறுடைத்த நாடு 'சோறநாடு' ஆகிப் பின் சோழ நாடாகியது என்பர். நெல்லின் மற்றொரு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து "சோழ" என்று வழங்கிற்று என்பார் தேவநேயப் பாவாணர். சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடி அல்லது குலத்தின் பெயராகும் என்பது பரிமேலழகர் கருத்து. சோழ மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சோழ மன்னர்கள் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13-ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.
கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளர்களினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான். 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராசராச சோழனும், அவனது மகனான முதலாம் இராசேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.
கி.பி.10-12-ஆம் நூற்றாண்டுகளில், சோழர்கள் வலிமை பெற்று மிகவும் உயர் நிலையில் இருந்தனர். அக்காலத்தில் சோழ நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராசராசனும், முதலாம் இராசேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராசராசன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இராசேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் வென்றதாகத் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.
சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் அடையாள முத்திரையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களில் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. சோழர் சூடும் மலர் ஆத்தி.
களப்பிரர்:
தென்னிந்தியாவை ஆண்ட அரசாளர்கள். களப்பாளர் என்றும் இவர்கள் குறிப்பிடப்படுவதுண்டு. இவர்கள் தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 300 - கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டுள்ளார்கள். இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் சமண சமயம், பெளத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாளி மொழியை ஆதரித்தாகவே தெரிகின்றது. எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக் காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்பட்டுள்ளது.
பல்லவர்:
ஏறத்தாழ 700 ஆண்டுகள் தென்னிந்தியாவில் நிலைத்து ஆட்சி புரிந்திருந்தும் - அவர்களைப் பற்றிய பல பட்டயங்களும் கல்வெட்டுக்களும் கிடைத்திருந்து - அவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்? என்பன போன்ற கேள்விகட்கு விடையளித்தல் எளிதன்று. அவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை.
தில்லி சுல்தான:
தில்லி சுல்தானகம் என்பது 1206 ஆம் ஆண்டு முதல் 1526 ஆம் ஆண்டு வரை இந்தியாவை ஆண்ட பல்வேறு அரசுகளைக் குறிக்கும். பல்வேறு துருக்கிய, பஸ்தூனிய வம்சத்தினர் தில்லியில் இருந்து இந்தியாவை ஆண்டனர். இவற்றுள் மம்லுக் வம்சம் (1206-90), கில்சி வம்சம் (1290-1320), துக்ளக் வம்சம் (1320-1413), சய்யித் வம்சம் (1414-51), லோடி வம்சம் (1451-1526) என்பன அடங்கும். 1526 இல் முகலாயப் பேரரசு சுல்தானகத்தைத் தன்னுள் அடக்கிக்கொண்டது.
விஜயநகரப் பேரரசு:
இந்தியாவின் தக்காணப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பேரரசு ஆகும். இது 1336 ஆம் ஆண்டில் முதலாம் ஹரிஹரர் மற்றும் அவரது சகோதரரான முதலாம் புக்கராயர் ஆகியோரால் நிறுவப்பட்டது. இப் பேரரசு 1646 வரையில் நீடித்ததாயினும், 1565 ஆம் ஆண்டில் தக்காணத்துச் சுல்தான்களால் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் இப் பேரரசு பெரிதும் வலுவிழந்து போனது. இதன் தலைநகரமான விஜயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது. இந் நகரின் அழிபாடுகள் இன்றைய இந்திய மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஹம்பியைச் சுற்றிலும் காணப்படுகின்றன. மத்தியகால ஐரோப்பியப் பயணிகளான டொமிங்கோ பயஸ் (Domingo Paes), பெர்னாவோ நுனிஸ் (Fernao Nuniz), நிக்கோலோ டா கொன்ட்டி (Niccolò Da Conti) ஆகியோரது ஆக்கங்களிலிருந்தும், உள்ளூர் இலக்கிய மூலங்களில் இருந்தும் இதன் வரலாறு பற்றிய பல முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. இப்பகுதியில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளும் விஜயநகரப் பேரரசின் வலு மற்றும் வளம் குறித்த பல தகவல்களைத் தருகின்றன.
இப் பேரரசு தொடர்பான நினைவுச் சின்னங்கள் பல தென்னிந்தியா முழுவதும் பரவலாக உள்ளன. இவற்றுள் ஹம்பியில் உள்ளவை பெரிதும் புகழ் பெற்றவை. விஜயநகரக் கட்டிடக்கலைப் பாணி தென்னிந்தியக் கட்டிடக்கலையின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். பல பல நம்பிக்கைகள் மற்றும் நாட்டார் மரபுகளின் தொடர்புகள், இந்துக் கோயில் கட்டுமானங்களில் புதுமைகளைப் புகுத்தியது. இது முதலில் தக்காணத்திலும் பின்னர் திராவிடக் கட்டிடக்கலையிலும் ஏற்பட்டது. சமயச் சார்பற்ற கட்டிடங்களில் வட தக்காணத்துச் சுல்தானகக் கட்டிடக்கலையின் தாக்கங்கள் காணப்படுகின்றன.
மதுரை நாயக்கர்கள்:
மதுரையையும், அதைச் சார்ந்த பகுதிகளையும் 1529 தொடக்கம், 1736 வரை ஆண்டார்கள். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர்கள் ஆரம்பத்தில் விஜயநகரப் பேரரசின் கீழ் அரசப் பிரதிநிதிகளாக இருந்தனர். விஜயநகரப் பேரரசு பலமிழந்தபோது, தங்கள் ஆட்சிப்பகுதிகளில் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு பேரரசிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். நிர்வாக முறைகளில் புதுமைகளைப் புகுத்தியதன் மூலம் மதுரை நாயக்கர்கள் மக்களோடு தங்கள் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டனர். இவற்றுள் தங்கள் நாட்டை 72 பாளையங்களாகப் பிரித்து நிர்வாகம் மேற்கொண்டது முக்கியமானது.
இசுலாமியர் ஆட்சி:
தமிழகத்தில் இசுலாமியர் ஆட்சி பாண்டிய நாட்டில் கி.பி. 1142ஆம் ஆண்டு துவங்கியதாக அறியப்பட்டாலும் அதற்கு முன்னரே மக்களிடையே இசுலாம் பரவியிருந்தது. கி.பி எட்டாம் நூற்றாண்டில் சேர மன்னனான சேரமான் பெருமாள் பாசுகர ரவிவர்மா என்பவரின் காலத்தில் இசுலாம் மேற்கு மலபார் கடற்கரை பகுதிகளில் அறிமுகமாகியது. பின் இது கன்னட மற்றும் தமிழக பகுதிகளிலும் பரவியது. இதே சமயத்தில் வியாபார நோக்கத்தோடு சில அராபிய, எகிப்து மற்றும் துருக்கிய குழுக்கள் தமிழகத்தின் சோழ மண்டல கடற்கரை பகுதிகளில் முகாமிட்டன. இவர்கள் மூலமாக இசுலாமிய மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள், வர்த்தக மற்றும் அயல்நாட்டு ஏற்றுமதியின் காரணமாக அந்தந்த பகுதியை ஆண்ட மன்னர்களுக்கு நெருக்காமானார்கள். இதன் மூலம் ஆட்சி அதிகாரத்திலும் பங்கு பெற்றனர். இதே நேரத்தில் சில வட இந்திய இசுலாமிய அரசுகளின் எல்லை விரிவாக்க நடவடிக்கைகளின் மூலமாகவும் சில இசுலாமிய அரசுகள் தமிழகத்தில் ஏற்ப்பட்டன. வட இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் தான் இசுலாம் பரவியுள்ளது ஆனால்,தமிழகத்தில் இசுலாம் பரவிய பின்னர்தான் இசுலாமியர் கையில் ஆட்சி, அதிகாரம் வந்துள்ளது
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு:
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு என்பது 1858 முதல் 1947 ஆம் ஆண்டு வரை இந்திய துணைக் கண்டத்தில் நிலவிவந்த பிரித்தானிய ஆட்சியைக் குறிக்கும். அச்சமயம் இந்தியா என பொதுவாக அழைக்கப்பட்டாலும் ஐக்கிய இராச்சியத்தால் [1] நேரடியாக ஆட்சி செய்யப்பட்ட மாகாணங்கள், பிரித்தானிய முடிக்கு கீழ்பட்ட அரசர்களால் ஆட்சி செய்யப்பட்ட முடியாட்சிகள் என்பவற்றைக் கொண்டிருந்தது.1976 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இது இந்தியப் பேரரசு என அழைக்கப்பட்டு அப்பெயரிலேயே கடவுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன. ஆளும் முறை 1858 ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சிமுடிவுக்கு கொண்டுவரப்பட்டு விக்டோரியாவின் ஆட்சியின் போது பிரித்தானிய முடிக்கு மாற்றப்பட்டதோடு தொடங்கியது. (1876 ஆம் ஆண்டு விக்டோரியா தன்னை இந்தியாவின் பேரரசியாக பிரகடப்படுத்தினார்.)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.