Monday, 17 September 2012

நூற்றி எட்டு மலர்கள்


தமிழ்ச் சங்கப் புலவர்களில் மிகவும் புகழ் பெற்றவர் கபிலர். இவர் தான் அதிகமான சங்கப் பாடல்களைப் பாடியவர். இவரை, "புலனழுக்கற்ற அந்தணாளன்" என்று வேறு ஒரு புலவர் பாராட்டுகிறார். ஒழுக்க சீலர், உத்தமர், அதிகமான பாடல்களைப் பாடியவர், கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் மகளிரை மணம் புரிவித்துக் கடைத்தேற்றியவர் - இவர் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பெரும் தாவரவியல் நிபுணர் (BOTANIST).

இருநூறுக்கும் மேலான பாடல்களைப் பாடிய கபிலர், குறிஞ்சிப் பாட்டு என்னும் 261 வரிகளுள்ள நீண்ட ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் பாடிய இப்பாடல் பத்துப் பாட்டு என்னும் நூலில், எட்டாவது பாட்டாக இடம் பெறுகிறது. இதில் தொண்ணூற்று ஒன்பது மலர்களின் பெயர்களை வரிசையாக எடுத்துக் கூறுகிறார்.

ஒரு நிகழ்ச்சியில், இந்த தொண்ணூற்று ஒன்பது மலர்களுடன், மேலும் பல மலர்களை சேர்த்து, கொங்கு நாட்டின் சிறப்பான அண்ணன் நடிகர் சிவகுமார் அவர்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு நூற்றி எட்டு மலர்களையும் அடுக்கிச் சொல்லி, மானசீகமாக தூவி வணங்கியதாக நினைவு. மேலும், அவரது மைந்தர் நடிகர் சூர்யா, பூவெல்லாம் கேட்டுப் பார் என்கிற திரைப்படத்தில் அந்த மலர்களை வரிசையாக அடுக்கி கூறி, கதாநாயகியை ஆச்சரியப்படுத்துவதாக ஒரு காட்சி அமைப்பு. இதோ அந்த மலர்களின் வரிசை.


ரோஜா, மல்லி, முல்லை, செம்பருத்தி,
செம்பங்கி, கனகாம்பரம், ஆவாரம்,
வள்ளிதழ் ஒண்செங்காந்தல், ஆம்பல்,
அனிச்சம், தண்கயக்குவளை, குறிஞ்சி,
வெட்சி,செங்கொடுவேரி, தேமா,
மணிச்சிகை, யுரிதுநாறு, அவிழ்தொத்து,
உந்தூழ், கூவிளம், எறுளம்,
சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை,
வான்பூங்குடசம், எருவை, செருவிளை,
மணிப்பூங்கருவிளை, பயினி, வானி,
பல்லிணர்க்குரவம், பசும்பிடிவகுளம்,
பல்லிணர்க்காயா, விரிமலராவிரை,
வேரல், சூரல், குரீஇப்பூளை,
குறுநறுங்கண்ணி, குறுகிலை, மருதம்,
விரிபூங்கோங்கம், போங்கன், திலகம்,
தேங்கமழ்பாதிரி, செருந்தி, அதிரல்,
பெருந்தண் சண்பகம், கரந்தை, குளவி,
கடிகமழ் கலிமா, தில்லை, பாலை,
கல்லிவர் முல்லை, குல்லை, பிடவம்,
சிறுமாரோடம், வாழை, வள்ளி,
நீல்ணறு நெய்தல், தாழை, தளவம்,
முள்தாள் தாமரை, ஞாழன், மௌவல்,
நறுந்தண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை,
காஞ்சி, மணிக்குலை, கல்கமழ் நெய்தல், பாங்கர்,
மராஆம்பல், பூந்தணக்கம், ஈங்கை, இலவம்,
தூங்கிணர்க்கொன்றை, அடும்பம், ஆத்தி,
நெடுங்கொடி அவரை, பகன்றை, பலாசம்,
பல்பூம்பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடாப்பூந்தோன்றி,
நந்தி, நறவம், நறும்புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருக்கத்தி, ஆரம்,
காழ்வை, கடியிரும்புன்னை, நரந்தம்,
நாகம், நள்ளிருள்நாறி, குருந்தம்,
வேங்கை, புழகு.

சூரிய காந்தி, நெருஞ்சி ஆகிய மலர்கள் சூரியன் இருக்கும் திசையை நோக்கியே இருக்கும். காலையில் கிழக்குத் திசையையும், மாலையில் மேற்குத் திசையையும் நோக்கி இருக்கும். இதை நன்கு கவனித்த சங்கப் புலவர்கள் புறநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, அகநானூறு ஆகியவற்றில் குறிப்பிடுகின்றனர்.

சில தாவரங்கள் பூக்காமலேயே காய்க்கும். இதைக் கவனித்த காரிக்கண்ணனார், "முழு முதல் தொலைந்த கோளி ஆலத்து..." என்ற வரியில் ஆல மரம் பூவாமலேயே காய்ப்பதைக் குறிப்பிடுகிறார். தமிழ் இலக்கியம் ஒரு அறிவுக் கடல். அதில் இப்படி ஏராளமான முத்துக்கள் உள்ளன.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.