Saturday, 1 September 2012

ம. சிங்காரவேலர்

ம. சிங்காரவேலர் (பெப்ரவரி 181860 -பெப்ரவரி 111946தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுவுடமைவாதியும் தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். மயிலாப்பூர் சிங்காரவேலு செட்டியார் என்ற முழுப்பெயர் கொண்ட இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக "சிந்தனைச் சிற்பி" எனப் போற்றப்படுகிறார்.


கல்வியும் தொழிலும்

சிங்காரவேலர் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குறைஞர் ஆனார். வழக்குறைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடர்ந்த இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளாலும் காந்தியச் சிந்தனைகளாலும் ஈர்க்கப்பட்டார்.

சமூகப் பணிகள்

  • இந்தியாவில் முதன்முதலாக மே நாளைக் கொண்டாடியவர். (தொழிலாளர் நாள்)
  • உருசியாவின் கம்யூனிசப் புரட்சியால் கவரப்பட்டு, இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918இல் தொடங்கினார். சென்னை பக்கிங்காம் கர்னாடிக் ஆலையில் தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார்.
  • தொழிலாளர் நலனுக்காக மே 1, 1923 ல் தொழிலாளர் விவசாயக் கட்சியை தொடங்கினார்
  • 1925ல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கிய தலைவர்களுள் இவரும் ஒருவர்.
  • இவர் சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்த போது பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அதன் பின்னர் இத்திட்டம் இடையிலேயே கைவிடப்பட்டது. எனவே இவரே காமராஜர் தமிழகம் முழுவதும் தொடங்கிய மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி ஆவார்.
  • தமிழ் மொழிக்காக பெரிதும் பாடுபட்டார். தமிழை ஆட்சி மொழியாக்கும் கோரிக்கையை வலியுறுத்தினார்.
  • பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் பல நூல்களை வேறு மொழிகளிலிருந்துத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.இவர் எழுதிய சிந்தனை நூல்கள் மாஸ்கோ நகர் லெனின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. இவருடைய நூலகள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
  • பெரியார் ஈ. வே. ராமசாமியின் சுயமரியாதை இயக்கம் 1930களின் ஆரம்பத்தில் பொதுவுடைமைக் கொள்கையின் பக்கம் சாய சிங்காரவேலரின் தூண்டுதல் காரணமாக இருந்தது.

ஈடுபட்ட போராட்டங்கள்

சிங்காரவேலர் 1918ஆம் ஆண்டு மகாத்மா காந்தியைத் தன் தலைவராக ஏற்றார். இவர் ஆங்கிலேய ஆட்சியின் இரவுலத் சட்டத்தினை எதிர்த்தார். மேலும் 1919ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து காந்தி ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்திற்கு அனைத்து வழக்குரைஞர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அதன் காரணமாக இவர் தனது வழக்குரைஞர் ஆடையை எரித்தும் "இனி எப்போதும் வக்கீல் தொழில் பார்க்க மாட்டேன். என் மக்களுக்காகப் பாடுபடுவேன்!" என்று கூறியும் ஆங்கில அரசுக்குத் தனது எதிர்ப்பையும் காந்திக்குத் தனது ஆதரவையும் காட்டினார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையைச் சமாளிக்கும் விதமாக இங்கிலாந்தின் வேல்சு இளவரசர் இந்தியாவுக்கு வந்தார். அவரது வருகையை எதிர்க்கும் விதமாக சிங்காரவேலர்சென்னையில் பெரிய போராட்டம் ஒன்றை முன்னின்று நடத்தினார். இப்போராட்டம் ஆங்கிலேய அரசையே உலுக்கியது என்று அறிஞர் அண்ணா கூறியுள்ளார்.

சிறப்பு

ம. சிங்காரவேலர் மீனவச் சமூகத்தைச் சேர்ந்தவராதலால், தமிழக அரசு மீனவர் வீட்டு வசதித் திட்டத்திற்கு இவரது பெயரைச் சூட்டியுள்ளது. மேலும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குசிங்காரவேலர் மாளிகை என்று பெயர் சூட்டியது. இவர் உருசியப் புரட்சியாளர் லெனினின் நெருங்கிய நண்பர். பேரறிஞர் அண்ணா இவரை, "வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்படும் ஒரு நேரத்தில் ஒரு புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர்!" என்று கூறியுள்ளார்.

அரசு விழா

இவர் பிறந்து 150 வருடங்கள் நிறைவுறுவதை நினைவுகூறும் விதமாக தமிழக அரசு சிங்கார வேலர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடியது. அதன் படி பெப்ரவரி 182011 அன்று அனைத்து அரசு பள்ளிகளிலும் சிங்காரவேலர் பிறந்த நாள் விழா கொண்டாட ஆணை பிறப்பிக்கப்பட்டது.. அவரது சிந்தனைகள், வாழ்க்கை வரலாறு, ஆகியவற்றை குறித்து மாணவ மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டிகள், கருத்தரங்குகள் நடத்தபட்டன.




No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.