Friday, 4 January 2013
பறை (இசைக்கருவி)
பறை ஒரு தமிழிசைக் கருவியாகும். இது தோலால் ஆன மேளமாகும். 'பறை' என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். 'பேசு' எனப்பொருள்படும் 'அறை' என்ற சொல்லினின்று 'பறை' தோன்றியது. (நன்னூல் : 458). பேசுவதை இசைக்கவல்ல தாளக் கருவி 'பறை' எனப்பட்டது. பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து. தோலிசைக் கருவிகளின் தாய். தமிழினத்தின் தொன்மையான அடையாளம். உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம். தமிழர் வாழ்வியலின் முகம். கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனம். பறையடித்து தகவல் சொல்லுதல் பழங்காலத்தில் ஒரு முக்கிய தகவல் பரப்பு முறையாகவும், பறையரின் தொழிலாகவும் அமைந்தது. பண்டைய காலத்தில் வாழ்ந்த தொல்குடித் தமிழர்களின் நிலவியல் பாகுபாட்டின் அடிப்படையிலும் 'பறை' பயன்படுத்தப்பட்ட வரலாறு உண்டு. குறிஞ்சிப்பறை, முல்லைப்பறை, மருதப்பறை, நெய்தற்பறை, பாலைப்பறை என ஐய்ந்திணைகளிலும் பறை முழக்கிய செய்திகள் காணக் கிடைக்கின்றன. 'பறை' என்ற சொல்லே இசைக் கருவியையும், செய்தி அறிவிக்கும் முறையையும் குறித்தது என தொல்காப்பியம் கூறுகிறது.
வரலாறு
பழங்காலத் தமிழர் வாழ்வியலில் செய்தியூடகம் என்று ஒன்று இல்லாதக் காலக்கட்டத்தில், ஒரு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை, அறிவித்தல்களை, அரசக் கட்டளைகளை ஊர் ஊராகச் சென்று சொல்லுதல் "பறைதல்" என்றும், அவ்வாறு ஊர் ஊராகச் சென்று சொல்பவர் "பறையர்" என்பதும் காரணப்பெயர்களாகும். காலப்போக்கில் தமிழர் வாழ்வியலின் சாதிய வேறுப்பாடுகளின் அடிப்படையில் பறை, பறையர் எனும் தூயத் தமிழ் சொற்கள் தொழில் நிலையை குறிக்கும் பெயராக மாற்றம் பெற்றுள்ளன.
அதேவேளை ஊரூராகச் சென்று செய்திகள், அறிவித்தல்கள், அரச மற்றும் நிர்வாகக் கட்டளைகள் போன்றவற்றை பறைபவர் (சொல்பவர்), தற்போதைய தற்கால ஒலிப்பெருக்கி போன்ற சாதனங்கள் இல்லாத நிலையில் உரத்த குரலில் சத்தமிட்டே பறைய வேண்டியக் கட்டாயச் சூழல் இருந்திருக்கும் என்பதை இன்றையச் சூழ்நிலையில் எளிதாகப் புரிந்துக்கொள்ளலாம். அத்துடன் உரத்தக் குரலில் சத்தமாகப் பறைபவர் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு கருவியின் துணைக்கொண்டு, அதனை ஓங்கி அடித்து ஒலியெழுப்பி, தான் கொண்டு வந்த செய்தியை, அல்லது அறிவித்தலை மக்களுக்குப் பறைவார்.
இதனால் காலப்போக்கில் "பறை" எனும் வினைச்சொல், பறையும் பொழுதும் மக்களை ஈர்ப்பதற்கு பயன்படுத்திய ஒலியெழுப்பிய கருவிக்கான பெயர் சொல்லாக நிலைத்துவிட்டது.
வாழ்வியல் கூறுகளுடன் பறை..
ஒரு மன்னன் எதிர்நாட்டுக்கு சென்று போர் புரியும் முன் அங்குள்ள போர் புரியவியலாத மக்களை வெளியேர வேண்ட,[1]
பெருகிவரும் புனலை அடைக்க,
உழவர் மக்களை அழைக்க,
போர்க்கெழுமாறு வீரர்களை அணிதிரட்ட,
வெற்றி தோல்வியை அறிவிக்க,
வயல்களில் உழவு வேலை செய்வோருக்கு ஊக்கமளிக்க,
விதைக்க,
அறுவடை செய்ய,
காடுகளில் விலங்குகளை விரட்ட,
மன்னரின் செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க,
இயற்கை வழிபாட்டில்,
கூத்துகளில்,
விழாக்களில்,
இறப்பில்
எனப் பல்வேறு வாழ்வியல் கூறுகளுடன் 'பறை' இணைந்து இயங்கியுள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன.
"பறை என்பது ஓடும் இசையை ஒழுங்கு பெற நிறுத்தி ஓர் அளவோடு சீரோடு, ஒத்த அழகோடு நடக்க, இசைக்கு நடை கற்பிக்கும் கருவி' என முனைவர் வளர்மதி தன்னுடைய "பறை' ஆய்வு நூலில் விளக்குகிறார்.
பறை ஆட்டம்.................................
பறை ஆட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான நடனம் ஆகும். பறையாட்டம் உணர்ச்சி மிக்கது. மற்றும் எழுச்சி மிகுந்தது. அதிர்ந்தெழும் பறையின் ஓசைக்கேற்ப ஆடக்கூடியது என்பதால் பறையாட்டம் கிளர்ந்தெழும் உடல் அசைவுகளைக் கொண்டது. ஆதி மனித சமூகம் தங்கள் கூடுதலுக்காகவும், தங்கள் குழுவுக்கு ஆபத்துக்களை உணர்த்தவும், விலங்குகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் எழுப்பிக் கொண்ட சத்தம் தான் பறையாட்டத்தின் மூலம் எனக் கருதப்படுகிறது. ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை எழுப்பி, கேட்போரை ஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் சக்தி வாய்ந்தது இது.
பறையின் வகைகள்....
பறையின் இசையும், வடிவமும் நுணுக்கமாக வேறுபடுகிறது. அவற்றில் முக்கியமானவை வருமாறு;- [3]
அரிப்பறை - அரித்தெழும் ஓசையையுடைய பறை.
அரிப்பறை மேகலை யாகி யார்த்தவே (சீவக சிந்தாமணி. 2688).
ஆறெறிப் பறை - வழிப்பறி செய்வோர் கொட்டும் பறை. திருக்குறள் - 1076
ஆறெறிபறையுஞ் சூறைச் சின்னமும் (சிலப்பதிகாரம். 12, 40).
உவகைப்பறை - மகிழ்ச்சியைக்குறிக்கும் பறை. (திவாகர நிகண்டு)
சாப்பறை - சாவில் அடிக்கப்படும் பறை. (திவாகர நிகண்டு)
சாக்காட்டுப் பறை - இறுதிச் சடங்கின் போது இசைக்கும் பறை.
வெட்டியான்பறை - சில விசேடகாலங்களிற் கொட்டும் பறை.
நெய்தற்பறை - நெய்தல் நிலத்துக்குரிய பறை.திருக்குறள்-1115
பம்பை - நெய்தனிலங்கட்குரிய பறை. (திவாகர நிகண்டு).
தழங்குரற் பம்பையிற் சாற்றி (சீவக சிந்தாமணி.40).
மீன்கோட்பறை - நெய்தனிலப் பறை. (இறை. 1, பக். 17.)
மருதநிலப்பறை - மருதநிலத்திற்குரிய பறை.
கல்லவடம் - ஒரு வகைப்பறை
கல்லவடமிட்டுத் திசைதொழு தாடியும் (தேவாரம். 576, 6).
குரவைப்பறை - குறிஞ்சிநிலத்துக்குரியது. குறிஞ்சிப்பறை = குறிஞ்சிநிலத்துக்குரிய தொண்டகப் பறை.
தடறு - தொண்டகப் பறை. (அக. நி.)
குறும்பறை - குறும்பறை யசைஇ (புறநானூறு. 67, 9)
கொடுகொட்டி - ஒரு வகைப்பறை
கொடுகொட்டி யாடலும் (சிலப்பதிகாரம். 6, 43), குடமுழவங் கொடு கொட்டி குழலு மோங்க (தேவாரம். 225, 2).
கோட்பறை - செய்திகளை நகரத் தார்க்குத் தெரிவிக்கும் பறை.
தமுக்கு - செய்தி தெரிவிக்க முழக்கும் ஒருகட் பறை.
நிசாளம் - ஒருகட் பறை. நிசாளந் துடுமை (சிலப். 3, 27, உரை).
சூசிகம் - ஒருவகைப் பறை. தகுதியெனக் கூறும் நெறி.
தக்கை - அகப்புறமுழவு மூன்றனுள் ஒன்றாகிய ஒருவகைப் பறை. (பிங்கல நிகண்டு); (சிலப்பதிகாரம். 3, 26, உரை.)
தடாரி - பம்பையென்னும் பறை. (பிங்கல நிகண்டு)
பறைத்தப்பட்டை, தண்ணம், தம்பட்டம், திடும், திண்டிமம், நாவாய்ப்பறை, திமிலை (சிலப்பதிகாரம். 3, 27, உரை)
தலைப்பறை - யானை முதலியவற்றின் முன்னே கொட்டும் பறை.
படலை - வாயகன்ற பறை. (சூடாமணி நிகண்டு)
பண்டாரமேளம் - அரச விளம்பரங் குறிக்கும் பறை.
பன்றிப்பறை - காட்டுப்பன்றிகளை வெருட்டக் கொட்டும் பறை. (பிங்கல நிகண்டு)
முரசம், வெருப்பறை - போர்ப் பறைகள்.
முரச மிடைப்புலத் திரங்க வாரமர் மயங்கிய ஞாட்பில் (புறநானூறு. 288).
பூசற்றண்ணுமை - பகைவருடன் போர்புரிதற்காக, வீரரை அழைத்தற்குக் கொட்டும் பறை. (நன்னூல்)
முருகியம் - குறிஞ்சிநிலத்தில் முருகனுக்குரிய வெறியாட்டுப் பறை. (தொல்காப்பியம். பொ. 18, உரை.)
வெறியாட்டுப்பறை - குறிஞ்சிநிலப் பறை.
வீராணம் - ஒருவகைப் பெரிய பறை.
வீராணம் வெற்றிமுரசு (திருப்புகழ். 264).
பஞ்சமாசத்தம் - சேகண்டி கைத்தாளம் காளம் என்றும் தத்தளி மத்தளி கரடிகை தாளம் காகளம் என்றும் இருவித மாகச் சொல்லும் ஐவகைப் பறை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.