Friday, 25 January 2013
மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்.......
மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.
ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.
அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.
முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."
இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."
மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."
வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.
அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.
1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.
2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!
3. உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.