Friday, 17 January 2014

ரிஜிஸ்டர் திருமணம் குறித்து:

"கல்யாண ஜோடியின் பிற்கால வாழ்க்கையில் சில சட்ட சம்பந்தமான ஆட்சேபனைகள் அநேக காரியங்களில் ஏற்படும் என்பதற்காக அதிலிருந்து தப்ப சில சடங்குகளைச் சாட்சியாக்க செய்யப்படுகின்றன என்று சொல்லப்படுகின்றது. இது அனாவசியமான சமாதானமாகும். ஏனெனில் கல்யாணங்களுக்காக ஒரு சட்டம் இருக்கிறது. அதாவது "சிவில் மேரேஜ் ஆக்டு" என்பதாகும் அந்தப்படி கல்யாணம் செய்வதற்கு மூன்று ரூபாய் தான் செலவாகும். அதாவது ஜில்லா ரிஜிஸ்டரார் முன்னிலையில் ஆணும் பெண்ணும் சென்று கையெமுத்துப் போட்டு விட்டு வருவதேயாகும். இதற்கு இரண்டு சாட்சிகள் தம்பதிகளைத் தெரியும் என்பதற்காகக் கையெழுத்துப் போட்டால் போதும். இந்தக் கல்யாணமானது மிகவும் கெட்டியானதும் பந்தோபஸ்தானதுமான கல்யாணமாகும்.
எப்படியெனில் சாதாரண வழக்க கல்யாணமானமானது எவ்வளவு பணம் செலவு செய்து எவ்வளவு ஆடம்பரமாகச் செய்த போதிலும், விவாகம் வரும்போது இது சட்டப்படி செல்லாது என்றோ, கல்யாணமே செய்து கொள்ளவில்லை யென்றோ, வைப்பாட்டியாக வைத்திருந்தேன் என்றோ வாதாடி சாட்சி விட்டால் சாட்சிகளைப் பொறுத்துத்தான் தீர்ப்பாகுமே ஒழிய, மற்றப்படி கல்யாணம் என்று சொன்னதாலேயே செல்லுபடியானதாக ஆகிவிட்டது. இப்படிப்பட்ட அநேக கல்யாணங்கள் மேல் கண்ட காரணங்கள் சொல்லி ரத்து செய்து கொள்ளப்பட்டும், குறைந்த பிரதிப்பிரயோஜனத்தோடு முடிவடைந்தும் இருக்கிறது. ஆனால் மேல்குறிப்பிட்ட ரிஜிஸ்டர் கல்யாணம் என்பது எந்த விதத்திலும் மறுக்கக் கூடியதாகாது. அரசாங்கம் உள்ளவரை ஆதாரம் இருந்து வரும்.
அன்றியும் சாதாரண கல்யாணத்தை விட பத்திரமானதுமாகும். சுலபத்தில் ஆணோ, பெண்ணோ மறுமணம் செய்து கொள்ளவும் முடியாது. ஆதலால் ரிஜிஸ்டர் கல்யாணம் என்பது மிக சிக்கனமானதும், சுருக்கமானதும், கெட்டியானதும், பந்தோபஸ்தானதுமாகும். பந்துக்களும், சிநேகிதர்களுக்கும் விஷயம் தெரிய வேண்டுமானால் பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்து விட்டு ரிஜிஸ்டர் ஆனதும் துண்டு விளம்பரம் வழங்கி விட்டால் நன்றாய் வெளியாகி விடும். ஆதலால் சிக்கனக் கல்யாணம், சீர்திருத்தக் கல்யாணம் என்பவைகளை நடத்த விரும்புவோர் ரிஜிஸ்டர் மூலம் செய்து விடுவதே சிறந்த காரியமாகும்."

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.