Friday 31 August 2012

கெட்டிபொம்முலு (வீரபாண்டிய கட்டபொம்மன்)

வீரபாண்டிய கட்டபொம்மன்தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் முதன்மையான மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும்ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர்.


கட்டபொம்மன் பெயர் காரணம்

அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன்.
இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார். இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் இவர் பொம்மு நாயக்கர்  என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

வாழ்க்கை

ஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. குமாரசாமி என்றஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

போர்

கும்பினியார் கி.பி. 1793 இல் கப்பம் (திறை) கேட்டனர். கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 101798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார்.செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.

மீண்டும் எழுந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801 இல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801 இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801 இல் அதனைக் கைப்பற்றியது. தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.
1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அன்றைய தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.
தற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டு சென்னையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.






No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.