Friday 17 August 2012


தமிழ் மொழியை ஆய்வு செய்வோர், அதற்கான தரவுகளை பல்வேறு தளங்களிலும் தேடவேண்டியுள்ளது. திராவிட மொழிகளுக்குத் தாயாகவும், ஆரியத்துக்கு மூலமாகவும் தமிழ் விளங்குகின்றது என்ற கொள்கை பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.கி.பி பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு, தமிழகம் வந்த ஐரோப்பியர்கள்தாம், தமிழைக் கற்று தமிழின் சிறப்பைத் தமிழருக்கே உணர்த்தினர். தமிழர்கள், உலகின் மேற்குத் திசையை நோக்க, ஐரோப்பியர்களே, அவ்வாயிலைத் திறந்து விட்டனர். அதுவரையில் தமிழ் மொழியை மட்டுமே அறிந்திருந்த தமிழர், மேலை மொழிகளையும் கற்கத் தொடங்கினர்.
Veeramamunivar


வீரமாமுனிவர், கால்டுவெல் கங்காணியார், போப்பையர் போன்றோர், உலக மொழிகளுக்கில்லாத தனிச் சிறப்பு, தமிழுக்கு உண்டென்பதை உலகிற்கு உணர்த்தினர். மேலும் ஐரோப்பிய மொழிகளில் பலவாறு தமிழ்ச்சொற்கள் விரவிக் கிடப்பதையும் கண்டறிந்து வெளிப்படுத்தினர். ஆனால் முறையான ஆய்வுகள் அவர்களால் மேற்கொள்ளப்படவில்லை. உலக மொழிகளில் தமிழின் தாக்கங்கள் உண்டென்ற உண்மை ஐரோப்பியர்களால் வெளிப்படுத்தப்பட்டது.
Robert Caldwell

தமிழின் வரலாற்றை, தொல்காப்பியம் மற்றும் கடைக்கழக இலக்கியங்களைக் கொண்டே கணித்தனர். தொல்காப்பியத்துக்கு முந்திய தமிழ்மொழியின் வரலாறு அறியப்படவில்லை. அதற்கான முயற்சிகளிலும் அறிஞர்கள் ஈடுபடவில்லை. முதன் முதலில் வணக்கத்திற்குரிய ஈராஸ் பாதிரியார், தமிழைச் சிந்துவெளியில் கண்டார். தமிழின் எல்லை முதன்முதலில் அப்போதுதான் விரிவடைந்தது.
G.U.Pope
கடந்த இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், மெசப்பொத்தோமியாவின் வரலாற்று நகரங்கள் பல அகழ்வாய்வு செய்யப்பட்டன. அதிலிருந்து கி.மு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்வேறு செய்திகள் வெளிப்பட்டன. அவைகளில் சிறப்பானவை அக்காலத்திய இலக்கியங்களே எனலாம். சிந்துவெளியில் தனிச் சொற்களாக அறியப்பட்ட நிலையில், மெசப்பொத்தோமியாவில் இலக்கியங்களாகவே கிடைத்தன. அவை முழுமையாகக் கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்தவை பலநூறு பக்க அளவில் அறியப்பட்டுள்ளன.

அவை யாவும் ஆப்பு எடுத்து எழுத்து வடிவில் ( ) உள்ளன. அவைகளை ஆய்வு செய்த மேற்கத்திய அறிஞர்கள், அவைகளை நூல் வடிவில் இன்று வெளிக்கொணர்ந்துள்ளனர். அவ்விலக்கியங்கள் கூறும் செய்திகளைப் பல்வேறு அறிஞர்கள் ஆய்வு செய்து, தமது ஆய்வுகளையும் நூல் வடிவில் வெளியிட்டுள்ளனர். ஆனால் அச்செய்திகளின் ஆளத்தையும், மூலத்தையும் இன்றும்கூட அறிஞர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை. குறிப்பாக அவ்விலக்கியங்களைத் தந்த மக்கள் யாவர்? அவர்களது முன்னோர்கள் யாவர்? அவர்கள் பேசிய மொழி யாது? அம்மொழியின் மூலம் எங்குள்ளது? என்ற வினாக்களுக்கு இதுவரை அவர்களால் விடை காண இயலவில்லை. அவ்விலக்கியங்களில் காணப்படும் பல நூறு சொற்களுக்கான பொருளையும் அவர்களால் தர இயலவில்லை.

சுமேரிய, அக்காடிய, எபிறேய, போனீசிய, எகிப்திய மொழிகளிலும் மேலும் பல மொழிகளிலும் அவ்விலக்கியங்கள் இன்று அறியப்பட்டுள்ளன. அவ்விலக்கியங்கள் பற்றிய எந்த ஆய்வையும் இதுவரையில் எந்தத் தமிழ் அறிஞரும் மேற்கொள்ளவில்லை. இவ்விலக்கியங்கள் பற்றிய எந்தச் சிந்தனையும் தமிழறிஞர்களிடம் காணப்படவில்லை.

1. தொல் தமிழரின் வரலாறு

2. தொல் தமிழரின் பண்பாடு, நாகரிகம்

3. தொல் தமிழரின் அறிவியல், வானியல்

4. தொல் தமிழரின் சமயம்

5. குமரிக் கண்டம், அதன் அழிவு

6. தமிழரின் மேலைநாட்டுப் பரவல் 

ஆகியவை குறித்த வரலாற்றுப் பதிவுகளை, தமிழ் இலக்கியங்களில் முழுமையாகக் காண இயலவில்லை. மேற்கண்ட செய்திகள் யாவும், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவை தமிழையும் தமிழ் இனத்தையும், தமிழ்நாட்டு வரலாற்றையுமே குறிப்பிடுகின்றன என்பதை மேலை நாட்டு அறிஞர்கள் புரிந்து கொள்ளவில்லை.

இனி, தமிழரின் வரலாற்றை மீட்டெடுக்கவேண்டிய குறிப்புகளை, மேலை நாட்டு இலக்கியங்களில் தேடினால், அங்கு அவை கிடைக்கும். இதுவரையில் வெளிவராத புதிய செய்திகளைத் தமிழ் வரலாறு பெறும். அம்முயற்சியின் முதல் படியாக எபிறேய மொழியும், அம்மொழி பேசிய மக்களும் ஆய்வுக் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதன் வெளிப்பாடுகள், வியக்கத்தக்க வகையிலும், நம்பிக்கையூட்டும் வகையிலும் உள்ளன.

எபிறேய மொழிக்களத்திலேயே ஏராளமான தரவுகள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் உருவானவைகளே ஆசிரியரின் பல்வேறு ஆய்வு நூல்களாகும். தொடர்ந்து மற்ற இலக்கியங்களையும் ஆய்வு செய்யும் பணியில், நூலாசிரியர் முனைப்புடன் உள்ளார். அதற்கான காலம் விரைவில் கனியும் என நம்பலாம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.