ஊமைத்துரை (இ. நவம்பர் 16, 1801) வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி.
வாழ்க்கைக் குறிப்பு
இவரது இயற்பெயர் துரைசிங்கம். அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில்(இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்)அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திரமாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதிகட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டனர். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன். .
இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர் இவர்களுக்கு மகனாகப் பிறந்தார் ஊமைத்துரை . இவர் வீரபாண்டிய கட்டபொம்மனின்தம்பி .இவருக்கு சுப்பா நாயக்கர் என்ற செவத்தையா என்ற தம்பியும் இருந்தார் .தமிழ் நாட்டார் தரவுகள் இவரது பேச்சாற்றலைப் பகடி செய்யும் வண்ணம் இவருக்கு “ஊமைத்துரை” என்று பட்டப்பெயர் வந்ததாகச் சொல்கின்றன. இவரை எதிர்த்துப் போர் புரிந்த ஆங்கிலேயத் தளபதி மேஜர் வெல்ஷின் குறிப்புகள் இவர் பேச்சு திறன் குன்றியவர் என்பதால் இவ்வாறு அழைக்கப்பட்டார் எனத் தெரிவிக்கின்றன.
இவர் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போர்புரிந்தார். முதல் பாளையக்காரர்கள் போரில் இவர் பிடிக்கப்பட்டு பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 1801-ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பி முதல் போரில் அழிக்கப்பட்ட பாளையங்கோட்டை கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பினார். இவர் பின்னர் மருது சகோதரர்களுடன் கூட்டாகச் சேர்ந்து வெள்ளையர்களை எதிர்த்தார். மேலும் வெள்ளையர்களை எதிர்த்து உருவான, தீரன் சின்னமலை, கேரள வர்மா ஆகியோரைக் கொண்ட ஒரு பெரும் அணியிலும் இடம் பெற்றிருந்தார். இரண்டாவது போரில் அவரது கோட்டை வீழ்ந்த பின் மருது சகோதரர்களுடன் சேர்ந்து தப்பி காளையார் கோவிலில் தங்கியிருந்தார். பின்னர் காளையார் கோவிலும் ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்டு 1801 நவம்பர் 16-ஆம் நாள் இவரும் மருது சகோதரர்களும் தூக்கில் இடப்பட்டனர்.
பண்புகள்
ஊமைத்துரை நட்போடும் , மனிதாபிமானத்தோடும் திகழ்ந்து வந்ததாக வரலாறு கூறுகிறது. மருது பாண்டியர்கள், வெள்ளையத்தேவன் , தீரன் சின்னமலை , விருப்பாச்சி கோபால நாயக்கர் மற்றும் எல்லைத்தகராறு காரணமாக பகையாளியாக கருதப்பட்ட எட்டயபுரம் பாளையக்காரர்களிடம் என்று அனைவரிடமும் நட்போடு வாழ்ந்து வந்ததாகவும், ஆங்கிலேயர்கள் பலரை அழித்த ஊமைத்துரை அவரிடம் அடைக்கலம் கேட்டு வந்த ஆங்கிலேயர்களையும் அரவணித்து நட்போடு உபசரித்து அனுப்பினார் என்று ஆங்கிலேய ஆவணங்களில் உள்ளது
ஆங்கிலேய அதிகாரிக்கும் பரிவு
காலநெல் என்ற ஆங்கிலேயர் 1801 இல் தூத்துக்குடி மாவட்ட கம்பனி தளபதியாக ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டார். அவர் தூத்துக்குடி கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தநேரத்தில் ஊமைத்துரையின் படை வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டு பாஞ்சாலங்குறிச்சியில் அடைக்கப்பட்டார். அவரது மனைவி தன் கணவரை விடும்படி கேட்டுக்கொண்டதற்கு ஊமைத்துரை இசைந்தார். அவர்களுக்கு வீரவாள் பரிசாகவும் கொடுத்து , தூத்துக்குடி வரையிலும் பாதுகாப்பாக செல்ல குதிரை, இரண்டு வீரர்களையும் அனுப்பி வழி அனுப்பினார். ஊமைத்துரை தான் எனது நண்பர் என்றும், ஊமைத்துரையின் நட்பு, மனிதாபிமானம், வீரம் அனைத்தையும் கால்நெல் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.