Saturday 2 February 2013

சைவப் பண்பாட்டில் பெண்தெய்வ வழிபாடும் பெண்ணும்


அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்று உலகுக்கு அறிவித்த சைவப் பண்பாட்டிலே நவராத்திரி விரதம் பள்ளிக்கூடம் தொட்டு பல்கலைக்கழகம் அடங்கலாய் வேலைத்தளம் என்று விரிந்து மக்களோடு ஒன்றி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது யாவரும் அறிந்ததொன்றே.

எனினும் பெண் வழிபாடு சைவப் பண்பாட்டிலும் பண்டைய திராவிட சைவ வழிபாட்டு முறைகளிலும் எவ்வாறு உள்ளதென்பதை அடியேனின் அறிவுக்கு எட்டிய அளவு ஆராயவிளையலாம் என நினைக்கின்றேன்.

சிந்துவெளி கரப்பா நாகரீகம் (இன்றைய பாக்கிஸ்தான்) திராவிட நாகரீகம், தமிழ் நாகரீகம் என்று அறிஞர்கள் உறுதியாய் நம்புகின்றனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வு ஆராச்சி முடிவுகளும் அவ்வாறே பறைசாற்றியுள்ளன. சிந்து நதிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்கள் கூட்டத்திடம் இலிங்க வழிபாட்டுடன் பெண் தெய்வ வழிபாடும் இருந்துள்ளதை உறுதி செய்துள்ளனர். பெண்ணில் இருந்து முளைத்து வளரும் செடி உடைய வழிபாட்டுச் சின்னத்தையும் அவர்கள் அதற்கு ஆதாரமாக வைக்கின்றனர். பண்டைய எமது சிந்துவெளித் திராவிட மக்கள் உலக உயிர்களின் தோற்றத்திற்கு பெண்ணே மூலம் என்பதால், அந்தப் பெண்ணை மதிக்கவும் வணங்கவும் ஆரம்பித்துள்ளனர் . இந்த மக்கள் கூட்டத்திடம் இருந்த பெண்தெய்வ வழிபாடு, சாதரண இலிங்க வழிபாடு என்பன சைவ சித்தாந்தமாக வளர்ச்சிகண்டபோது, பரம்பொருளாகிய சிவனின் சக்தி பெண் என்று சிறப்புப் பெற்றது.

சடம் சிவன். சக்தி உமை. சக்தி இல்லாது சடம் இல்லை. ஆகா என்னே அற்புதம்.........என்னே மெய் சிலிர்க்க வைக்கும் விஞ்ஞானம்!சக்தி இன்றி சிவம் இல்லை. சிவம் இன்றி சக்தி இல்லை. அர்த்த நாதீசுவரராய் அறுபத்தி நான்கு சிவ மூர்த்தங்களில் ஒன்றாய் ஆண் பாதி பெண்பாதி என்ற உயர்ந்த தத்துவத்தை சைவம் உலகுக்கு அறிவித்தது. வீரத்திற்கு துர்க்கையாகவும் செல்வத்துக்கு இலக்குமியாகவும் கல்விக்கு சரசுவதியாகவும் பெண்ணை போற்றியது எமது பண்பாடு.

சைவத்தால் அகப்புறச் சமயங்களில் ஒன்றாக வகுக்கப்பட்ட சாக்தவழிபாட்டில் துர்க்கை வழிபாடு உயர்த்தப்பட்டுள்ளது. இன்று கல்கத்தாவில் இவ் வழிபாட்டுமுறை பெரிதும் பின்பற்றப்படுகின்றது. இவ் வழிபாட்டில் தந்திரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு போகங்கள் முன்னிலைப்படுத்தப்படுவதால் அகப்புறச் சமயமாக வகுக்கப்பட்டுள்ளது.
சனாதன சைவத்தில் சக்தியானது பெண்ணாக உருவகிக்கப்பட்டு, உமையாக போற்றப்பட்டு பரம்பொருளின் ஒருபாதியாக அர்த்தநாதீசுவரராக உயர்த்தப்பட்டு பெண் வழிபாடு முக்கியத்துவப் படுத்தப்பட்டுள்ளது.

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே என்று மணிவாசகத்தால் அம்மையாகவே முதலில் அறியப்படுகின்றான் எம் பிரான். திருஞான சம்பந்தர் குளத்திலே மூழ்கி குளித்த தந்தையைக் காணாது அழுதபோது அம்மையே அப்பா என்று அழுததாக சிறப்பிக்கப்படுகின்றார். குழந்தை முதலில் சொல்வது "அம்மா" என்ற வார்த்தையைத் தான். எனவே அப்படிப்பட்ட அம்மையை சிவத்தோடு ஒருமித்து ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதே இயற்கையின் நியதி என்கின்ற தத்துவத்தை சனாதன சைவம் உலகுக்கு அறிவிக்கின்றது.திருவிளையாடற் புராணங்களாகட்டும், பெரிய புராண நாயன்மார் வரலாறுகள் ஆகட்டும் இறைவன் இடப வாகனனாய் உமையோடு இணைந்தே எழுந்தருளி அருள் பாலிப்பதை அறியமுடியும். பெண்ணில்லாமல் செய்யும் இல்லறத்தோனின் தானம் செல்லுபடியற்றது என்பர். எனவே இல்லறத்தில் பெண்ணுக்கு பாதுகாப்பை வழ்ங்குவதில் சைவநெறி ஆழமான பங்களிப்பை செய்துள்ளது எனபது வெள்ளிடைமலை.

சாதரண அறிவற்றோர், எமது சமய வாழ்வியல் பண்பாடு பெண்களை வீட்டுக்குள் பூட்டி சுதந்திரத்தை பறித்துவிட்டதாக புலம்புவர்.புழுகுவர். உண்மை அதுவல்ல எனபது சமயத்தை ஆழ அறிந்தவர்கள் அறிவர்.

ஈசுடோரோஜோன் ஓமோன் புரோஜோஸ்டோரோன் ஆகிய ஒமோன்கள் பெண்களுக்கும் தெஸ்தெஸ்திரோன் ஒமோன் ஆண்களுக்கும் என்று வகுத்த இறைவன் நிச்சயம் பக்கசார்பானவன் என்று எப்படி அறியப்படமுடியும்? எதிலும் சமநிலை வேண்டும் என்று கூறுகின்ற அறிவற்றோர் ஆணின் ஓமோன்கள்களை பெண்களுக்கு(தங்கள் மனைவிமாருக்கு....பிள்ளைகளுக்கு)வழங்குவார்களா என்ன?இயற்கை வகுத்தவிதி இந்த ஓமோன்களின் செயற்பாடு. இயற்கையை உணர்ந்து ஒழுகுவதுதான் வளமான வாழ்கை. இதை உணர்ந்த எங்கள் பண்பாட்டு நெறி, மென்மையான பெண்களிடம் உள்ள சக்தி வன்மை உடையது என்று உணர்ந்து வழிபடத் தொடங்கினர். போற்றத் தொடங்கினர். சம உரிமை வழங்கப்படவிலை என்பது வெளித்தோற்றத்தில் இருந்து சமயத்தை நோக்குபவர்கள் கூறுகிற வதந்தி.பெண்ணிடம் அதிக கடமைகளை சைவம் ஒதுக்கவில்லை எனபதுதான் உண்மை. வீட்டுக்கு அரசியான பெண்ணிடம் இருந்த சுமைகள் ஏராளம். எனவே அவளிடம் சமூக கடமைகளை ஒதுக்கவிரும்பவில்லை.அவ்வளவே.ஆனால் சமூக கடமைகளில் ஈடுபடக்கூடாது என்று தடைவிதிக்கவில்லை என்பதை உணர்க. அதனால்தான் நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படும் காரைக்கால் அம்மையார், ஔவையார்( ஔவையார் என்பது காலத்திற்கு காலம் தோன்றிய இலக்கிய பெண்களின் பொதுப்பெயர் என்க.),திலகவதியார் என்று சமூக,சமய பெண்கள் சரித்திரத்தில் தோன்ற முடிந்தது. ஏனைய நெறிகளில் அன்றைய காலத்தில் பெண்களுக்கு எமது பண்பாடு வழங்கிய சுதந்திரத்தின் எள்ளளவு கூட வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதை இங்கு கூறியே ஆகவேண்டும். இன்றுகூட ஐரோப்பாவில் வழங்கப்பட்டுள்ள பெண் சுதந்திரத்தை அவர்களின் சமயப் பண்பாடுகள் ஏற்கவில்லை. அரேபியாவில் பெண்கள் வீட்டுக்கு வெளியே வருவதே அருமை.

ஆனால் மனித சுதந்திரத்தை......வழிபாட்டு சுதந்திரத்தை அறிவுறுத்துகிற எமது பண்பாட்டில் "கூடாது" என்று கூறப்படாததால் பெண் சமூகம் மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்துள்ளது.

உதாரணத்திற்கு உடன்கட்டை ஏறல் என்பது மூடநம்பிக்கை. ஏதோ ஒர் ஊரில் கணவன் மீதுகொண்டிருந்த உயர்ந்த அன்பால் ஆழமான காதலால் உடன்கட்டை ஏறிய பெண்ணைக்கட்ட சிலர் உடன்கட்டை ஏறினாலேயே அவள் உண்மையாக கணவனை நேசித்தாள் என்று அர்த்தம் என்று பிதற்றியிருக்க அது பத்து ஊருக்குச் சென்று ஒரு பழக்கவழக்கமாக உருமாறியிருந்துள்ளது. இதுபோன்ற எந்த ஒரு அர்த்தமற்ற கீழ்த்தரமான விடயங்களும் சைவத்தால் இம்மியளவும் அரவணைக்கப்பட்டதோ அன்றி அனுமதிக்கப்பட்டதோ அல்ல.

பெண்மையை போற்றுகின்ற எமது பண்பாட்டை மதிப்போம். பெண்ணை போற்றுவோம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.